Tuesday, September 22, 2009

களிநடைக்காலம் மறந்து...கௌசல்யா அக்காவை முதன் முதலில் புலிகுத்தி கோயிலில் தான் பார்த்தேன். சிவராத்திரிக்கு குலசாமி கோயிலுக்கு போவது எங்கள் வீட்டில் வருஷாவருஷம் தவறாமல் போகும் வழக்கம் ஏதும் இல்லை. இந்த முறை கட்டாயம் வர்றம்னு, எங்க கோயில் பூசாரி தலைக்கட்டு வசூல் பண்ண வந்த போது சொல்லிட்டதால நாலு வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. நாங்க எங்க குடும்பத்தோட மதுரையில இருந்து கார எடுத்துக்கிட்டு சிவராத்திரிக்கு ரெண்டு நாள் முன்னாடியே போய் சேர்ந்துட்டோம். அப்போ எங்க காம்பௌண்டில் குடியிருந்த சஞ்சீவி மாமா அவரோட ஒர்க்சாப்பில இருந்து ஒரு வெள்ளை அம்பாசிடர் காரை எடுத்து வந்திருந்தார். டீசலும், மூணு நாளைக்கு சாப்பாடும், வெத்தில பாக்கு போயிலைக்கு காசு கொடுத்துட்ட போதும் சஞ்சீவி மாமாவுக்கு. வண்டி ஓனரிடம் என்ன சொல்லிட்டு கார எடுத்துட்டு வந்தாரோ தெரியலை. மதுரைல இருந்து அறுவது கிலோமீட்டர்ல துலுக்கப்பட்டி சிமென்ட் பாக்டரி வரும் அதத்தாண்டி ஒரு வலது பக்க வளைவுக்குள் ஆறாவது மைலில் இருக்கிறது புலிக்குத்தி கிராமம். நிறைய ஜாதிக்காரங்களோட குலசாமிகளும் அங்கே தான் இருக்கு. எந்த சாமியும் ஒன்னோடோன்னு சண்ட சச்சரவு ஏதும் இல்லாம ஆண்டு வந்தனர்.

சிவராத்திரி நேரத்தில புலிக்குத்தி கிராமமே ஒரு புது வண்ணத்தில புரளும். செம்மண் கலரெல்லாம் போயிட்டு மஞ்ச கலரும், பச்சை கலரும் ஜாஸ்தியான மாதிரி தெரியும். பக்கத்து ஊர்கள்ல இருந்து நிறைய யாவாரிங்க கடை போடுறத்துக்கு வந்துடுவாங்க. இந்த வாட்டியும் நிறைய கடையா இருந்துச்சு கிராமத்துக்குள்ள நுழையும் போதே. குழந்தைங்க, பெரியவங்கன்னு எல்லாருக்கும் தேவையான எல்லா கடைகளும் புதுசா முளைச்சிருந்தது. விளையாட்டு சாமான் கடைங்க, டீக்கடைங்க, பஜ்ஜி, போண்டா கடைங்க, இளநீர், பதநீர், நொங்கு, குஞ்சலம், ரிப்பன், மைடப்பா, கேர்ப்பின், சீப்பு, சோப்பு டப்பா, சாந்து பொட்டு விக்கும் கடைங்க, சவ்வு மிட்டாய், ஐஸ் வண்டிங்க, பலூன்காரங்க, சாமிக்கு தேவையான, பூசைக்கு தேவையான சாமான், பூக்கடைங்கன்னு களை கட்டி இருந்துச்சு புலிக்குத்தியே. எல்லாருமே இங்க வாங்க, இங்க வாங்கன்னு கூப்பிட்டு தத்தமது வியாபாரத்தை பார்த்து கொண்டு இருந்தார்கள். எங்க போறதுன்னு தெரியாம சனங்கள் பெரும்பாலும் குமரிகளும், சிறுவர்களும் தான், எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு, பேருக்கு இது என்ன விலை, இது என்ன விலைன்னு கேட்டுக்கிட்டே திரிஞ்சாங்க. இந்த கிராமத்தை ஒட்டி ஒரு சின்ன ஆறு ஓடி கொண்டு இருந்தது, கன்னிசேரி என்ற பெயரில், எதன் கிளையாறோ தெரியலை, அப்பாவை கேட்டா சொல்வார், அநேகமா தாமிரவருனியா இருக்கணும். ஆத்துல தண்ணீர் இல்லாத சமயங்கள்ல, ஆத்துமணலில் ஊத்து பறிச்சுக்கிட்டு, வாளி வச்சு ஊத்தை வாடகைக்கு விட்டு இந்த கிராமத்தின் மிச்சமான ஊர்காரங்க காசு சம்பாதிப்பார்கள். மருதமலை மாமணியே, கற்பூர நாயகியே, விநாயகனே, ஆத்தாடி மாரியம்மா ன்னு தனக்கு விருப்பமான சாமியை குழாய் கட்டி கூப்பிட்டு கொண்டு இருந்தார்கள். தவில், தப்பு, உறுமி என்று மாடுகளையும், ஆடுகளையும், உடும்புகளையும் தோலாய் கட்டி அடித்து நாயனங்களையும், ஒத்துக்களையும் காற்றில் பரப்பினர். விரிதலையும், வேப்பிலையும், குலவை சத்தமும் பதினெட்டாம் படி கருப்பையும், சுடலைமாடனையும், முனிஸ்வரனையும், வீர சின்னம்மாளையும், முனிபைரவரையும் பலிக்கு ஏங்க வைத்து பந்திக்கு அழைத்தன. எல்லா கோயிலையும் ஏதாவது ஒரு சாமி ஏறி நின்னு குறி சொல்ல வாய் பொத்தி பக்த பங்காளிகள், சாமிக்கே என்ன வேணும்னு கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

கௌஸல்யா அக்காவின் குடும்பமும், ஏனைய தாயாதிகளின் குடும்பங்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மெட்டடொர் சரக்கு வேனில் வந்து எங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருந்தனர். தாயாதிகளின் பாசமாகவும், நேசமாகவும் பந்தல் வேய்ந்து சிறுசிறு பங்காளி கசப்புகளை மறைத்து பந்தலில் வெயில், பொத்தல்களாய் விரவிக் கிடந்தது.  வெளிச்சப் புள்ளிகள் கோலமிடும் விரல்கள் தேடி பந்தலின் முகப்பு வரை பரவலாகி இருந்தது.  சிவராத்திரிக்கு முதன் நாளில் தான் ஆற்றில் இருந்து மண் எடுத்து வந்து எங்க குலசாமி அம்மனுக்கு முகவடிவு செய்து பூஜை செய்வார்கள். அதுக்கு இன்னும் ஒரு நாள் இருந்தது, சிவராத்திரி அன்றைக்குத்தான் எல்லா தலைக்கட்டுகாரர்களும் ஒன்றாக சேர்ந்து பெரிய பூஜையாப்போடுவார்கள். மறு நாள் கிடாவெட்டு நடந்து கறிசோறு போடும் சம்பிரதாயம். அதுவும் தாயாதிகளின் கோயிலுக்கு சம்பந்தகாரர்கள் வந்துவிட்டால் எல்லா பங்காளி பெருசுகளும், இளவட்டங்களும் சேர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பதற்கான மரியாதை, கரும்பு, பூ, பழம் எல்லாம் வைத்து வரவேற்க வேண்டும் என்பது ஒரு ஏற்பாடு. அவர்கள் கோயிலுக்கு நாங்கள் போகும்போதும் இது போல செய்வதுண்டு.

கௌஸல்யா அக்கா எனக்கு பெரியம்மா மகளாக இருந்தாலும், எங்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் பெரிதாய் பழக்கவழக்கமில்லை. அவங்கப்பா பாம்பேல ஒரு சேட் கிட்ட டிரைவரா வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்து சொந்தமாய் காரைவீடு கட்டி வாழ்ந்தவங்க, அந்த காலத்திலேயே. (எங்க அப்பா கைய ஊனி கரணம் பாயற வரை, நாங்க வாழ்ந்தது சின்ன கூரைவேய்ந்த வீடு தான் என்று எப்போதும் சொல்வார் ஆக காரைவீடு அதிசயமான விஷயம் அப்போது). அவரை பாம்பே பெருமாள்னு சொன்னாதான் ஊருக்குள்ள தெரியும். அவரும் அப்படி தான் அறிமுகம் செய்து கொள்வார். அவரோட மூத்தமகனுக்குக் கூட பாம்பே கண்ணன்னு தான் பேரு, அவரும் பாம்பேல கோத்தாரி மில்ஸ் முதலாளிகிட்டதான் டிரைவரா இருக்கார். மத்ததெல்லாம் பொட்டப் பிள்ளையா போயிடுச்சேன்னு அவருக்கு கவலை, இல்லேன்னா எல்லாரையும் பாம்பேல டிரைவரா ஆக்கி சாரதி பரம்பரையாய் மாற்றியிருப்பார்னு ஊருக்குள்ள பேசிக்குவாங்க. கௌசல்யா அக்கா, பாம்பே பெருமாளுக்கு ரெண்டாவது பொண்ணு, மூத்தவங்க கலாக்கான்னு, சாத்தூர்ல கட்டிக் குடுத்திருக்காங்க, அவங்க வீட்டுக்காரரு பேனா நிப்பு கம்பெனி வச்சிருக்கார். அவங்களுக்கு அடுத்தவ தான் கௌஸல்யா அக்கா. அவளுக்கு அடுத்து மோகனா மற்றும் கல்யாணி என்ற விவரங்கள் பின்னால் கௌஸல்யா அக்காவே சொல்லியது. கார விட்டு இறங்கி, நாங்க எல்லோரும், சஞ்சீவி மாமா தவிர்த்து, எங்க தாயாதிகளின் பந்தலுக்கு நுழையும்போதே ஏகப்பட்ட விசாரிப்புகள், என்னப்பா வெங்கிடுசாமி! எத்தனை வருசம் ஆச்சு உனக்கு வீரசின்னம்மாள பார்க்க வர்றதுக்கு. இவந்தான் பெரியவனா என்று என்னைப்பார்த்து கேட்க, ஆமா அண்ணெ, இவன் தான் இங்கிலீஷ் மீடியத்தில படிக்கான். அப்படியா? விச் கிளாஸ் ஆர் யூ ரீடிங்னு அவரு கேட்க, நானும் செவன்த் என்று பதில் சொல்ல, அட்ராசக்கை, இவன கலெக்டரா ஆக்கிடு வெங்கிடுசாமி! பய சூட்டிகையா இருக்கானே! என்று வியப்பைக் காட்டினார். நான் இது வரைக்கும் எல்லா சப்ஜெக்டுகளும் பாஸானதே இல்லை என்று அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பாஸும், ஹரியும் (என் சகோதரர்கள்) பந்தலுக்குள் இருந்த இரண்டு பெண் குழந்தைகளுடன் அதற்குள் சிநேகமாகி விளையாட போய் விட்டார்கள். எங்க அப்பாவும், அவர் வயதொத்த பழைய கூட்டாளிகளை பார்த்தவுடன் அவர்களுடன் பேசச் சென்று விட்டார். அம்மா எங்க துணிமணிகள் கொண்டு வந்த பைகளையும், ஒரு தோல் பேக்கையும் என்னிடம் தந்து, கௌசல்யா அக்கா இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இடம் இருப்பதை சுட்டிக்காட்டி, அங்க போயி இரு, இந்தா நான் வாரேன். அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்களின் குலசாமி கோயிலும் இங்கேயே இருப்பதால், அவளுடைய உடன் பிறவா பிறப்புகளைப் பார்க்க கிளம்பி விட்டாள். எனக்கு எல்லோருமே என்னை தனியா விட்ட மாதிரி இருந்தது. அங்க என் வயசு பசங்களே இல்லாத மாதிரி இருந்தது. என்னையே பார்த்துக் கொண்டிருந்த கௌஸல்யா அக்கா, தன்னை நோக்கி வரும்படி என்னை அழைத்தாள். எனக்கு பார்த்தவுடனே கௌஸல்யா அக்காவை பிடித்துப்போனது. நானும் எல்லா சுமையையும் தூக்கிகிட்டு அவளுக்கு அருகே போனேன். கீழே விரித்திருந்த தார்ப்பாலினை சீராக நீவிவிட்டு, மண்ணை விலக்கி என் கையைப்பிடிச்சு, அருகே இருக்க வைத்தாள். எங்க பைகளுக்கும், தோல் பைக்கும் தோதா ஒரு இடம் பார்த்து வைக்கச் சொன்னாள். நான் அவ சொல்றத எதையுமே மறுக்காம செஞ்சிட்டு, அடுத்து என்ன என்பது போல பார்த்தேன்.

அப்போதான் நான் கௌஸல்யா அக்காவை முதன் முதலாப்பார்த்தேன். நீள முகத்தில், மாநிறமாய், மெலிதான தெத்துப்பல், முன் முடியை குட்டையாக வெட்டி விட்டு, முன்னால் நெளித்து விட்டு ஸ்டைல் பண்ணியிருந்தாள். நீலத் தாவனியும், பச்சைக்கலர் பாவாடையும், அதற்கேற்றாற் போல ரவிக்கையும் அணிந்திருந்தாள். கழுத்தில் ஒரு கருப்புக் கயிற்றில் ஒரு முத்து போன்ற ஒரு டாலர் கோர்த்திருந்தது. அவளுடைய உடைக்கு பொருத்தமான கலரில் கண்ணாடி வளையல்கள் அவ்வப்போது சப்திக்க அணிந்திருந்தாள். அப்போதான் என் பெயரைக் கேட்டாள், நான் சொல்லும் முன்பாகவே, சீனு தானே! எனக்குத் தெரியும், ரவி, சேதுவின் தாய் மாமா பையன், கரெக்டா! என்று என்னை வியக்க வைத்தாள். நான் உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டப்பா, ரகசியம்னு கண் அடித்து சிரித்தாள் மேல் நோக்கி. என்னை இதுவரை யாருமே சீனுன்னு கூப்பிட்டதில்லை, சீனி என்று பள்ளியிலும், என் வீட்டிலும், கருவாப்பையலே என்று பெத்த நாயினாவும், கருவண்டு என்று பிச்சம் நாயுடுவும், ஜெயாத்தையும் கூப்பிடுவார்கள். கௌசல்யா அக்காதான் முதன் முறையாக என்னை சீனு என்று கூப்பிட்டது, அதுவும் அவளின் நுனி நாக்கு, பல்லில் பட்டு காற்றுடன் சீனு என்று சொல்வது அழகாகவும், சந்தோஸமாகவும் இருந்தது. அவளுடன் இருந்த மற்றவர்களையும் அறிமுகப்படுத்தினாள், இது மோகனா, இது பெரிய சாந்தி, இது குட்டி சாந்தி, இது கலா, இது கல்யாணி, இது கோவில்பட்டிங்கிற செல்வம், எல்லோரும் என்னை வேற்று கிரகத்து மனுசனை பார்ப்பது போல பார்த்தார்கள். நான் எல்லோரையும் பார்த்து சிரித்தேன். கோவில்பட்டி தான் முதல்ல ஒட்டிக்கிட்டான்.

வெயில் அதிகமாக இருந்தது, காற்றும் இல்லாமல் பந்தலே புழுங்கியது, தாகமாகவும் இருந்தது, வீட்டில் இருந்து பாட்டிலில் எடுத்து வந்த தண்ணீரைத் தேடி எடுத்து குடித்து விட்டு என்னையே பார்த்துக் கொண்டு, ரொம்ப தண்ணீத் தாகமா இருக்கா, சிவராத்திரி அன்னைக்கு ராத்திரி மழ பெய்யும், அப்புறமா சூடு தனிஞ்சுரும், என்று பரிவாய், இறகு வருடலாய் பேசினாள்.  இந்த விநோத மௌனத்தில் ஆழ்ந்து  இருந்தவர்களை கலைப்பதற்காக, கௌசல்யா அக்கா, வாங்க எல்லோரும் போய் வெயிலுக்கு இதமா சேமியா போட்ட ஐஸ் வாங்கி சாப்பிடலாம், என்கிட்ட காசு இல்லக்கான்னு நான் சொல்ல பரவாயில்ல எண்ட்ட இருக்கு. என்று என்னுடன் அந்த குட்டி பட்டாளத்தையும் கூட்டிக்கொண்டு வெளியே கோயிலை நோக்கிச் சென்றாள். அவள் எனக்கு ஐஸ் வாங்கி குடுப்பதற்காகவே எல்லோரையும் கூட்டிச்செல்வதாகப் பட்டது. அப்பா, இன்னும் யாருடனோ, ஒரு வேப்பமரத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தாள். அம்மாவைக்கானோம், ஹரியும், பாஸ்கரும் என்னை ஐஸ் வண்டி பக்கத்தில் பார்த்ததும், அவர்களுடைய பிரிய தோழிகளை விட்டுவிட்டு ஓடிவந்து விட்டார்கள், சீனி எனக்கும் ஐஸ் வாங்கிக்கொடுன்னு, ரெண்டு பேரும், நான் என்கிட்ட காசு இல்லடா, இந்த அக்கா தான் வாங்கிக் குடுக்குறாங்கன்னு சொல்ல கேட்கிறமாதிரி தெரியலை, ஹரி அழவே ஆரம்பிச்சுட்டான். கௌசல்யா அக்கா, எல்லாருக்கும் நான் வாங்கித் தரேன்னு என்னைப் பார்த்து குனிந்து, கண்ணத்தை பிடித்து சொன்னாள். எனக்கு அவளைக் காலோடு கட்டிக் கொள்ளத்தோன்றியது, கையை மட்டும் பிடித்துக் கொண்டு, சேமியா ஐஸ், சவ்வரிசி ஐஸ் என்றும், அவரவருக்கு பிடித்த கலரில் ஐஸ் வாங்கிக் கொண்டோம், கௌசல்யா அக்காவும், பெரிய சாந்தி அக்காவும், எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை, அக்கா உங்களுக்குன்னு கேட்டப்ப, நாங்க இப்பதாண்டா ஐஸ் சாப்பிட்டோம், என்ன சாந்தி! என்றாள் எனக்கு நம்பிக்கையில்லாததை கண்டு, நாக்கை நீட்டி பார்த்தியா, ரோஸ் கலர்ல இருக்கு என்று சமாதானம் சொன்னாள். எனக்கு என்னவோ, கூட ரெண்டு டிக்கெட் சேந்துட்டதால தான் அவங்க ரெண்டு பேருக்கும் ஐஸ் இல்லாம போச்சுன்னு தோன்றியது. அப்பாட்ட காசு கேட்டு அக்காவுக்கு ஐஸ் வாங்கித் தரனும்னு நினைத்துக் கொண்டேன்.

கௌஸல்யா அக்கா என் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு குனிந்து கொஞ்ச நேரம் ஏதாவது விளையாடலாமான்னு கேட்க, என்ன விளையாட்டு விளையாடலாம் என்று எல்லோரையும் கேட்டாள். கல்லா, மண்ணா, கள்ளன் போலீஸ், குலைகுலையா முந்திரிக்கா, கண்ணாமுச்சி ரே ரே, நொண்டி, ஸ்கிப்பிங் என்று ஆளுக்காள் ஒவ்வொரு விளையாட்டா சொல்ல, கடைசியில் கல்லா, மண்ணா விளையாடிவிட்டு அப்புறமா, நொண்டி விளையாடலாம்னு கௌஸல்யா அக்கா சொல்ல, எல்லோரும் தலைவர் வார்த்தைக்கு கட்டுப்பட்ட தொண்டர்களாய், சரிக்கா என்று ஒரே குரலில் சொன்னோம், பாஸ்கர் மட்டும் ஸ்கிப்பிங்கும் விளையாடலாங்க்கான்னு கெஞ்சுவது போல கேட்க, கௌஸல்யா அக்கா என்னை பார்த்து ஸ்கிப்பிங் விளையாடலாமான்னு கேட்க நானும் சரியென்று சொன்னேன். எங்களையெல்லாம், கோயிலுக்கு பின்னால் உள்ள பொட்டலுக்கு அழைத்துச் சென்றாள் கௌஸல்யா அக்கா, அங்கு ஒரு பெரிய ஆலமரம், நிறைய விழுதுகளுடன், ஊஞ்சல் ஆடுவதற்கு வசதியாகவும் இருந்தது. யாரோ அதில் வாகாக கயிறு கட்டி ஒரு துண்டு மரத்தை ஊஞ்சலின் அமைப்பில் கட்டியிருந்தார்கள்.  குட்டி பட்டாளம் அதைப்பார்த்தவுடன் அதில் விளையாட போய் விட்டது.   மற்ற எல்லோரும் நான் உட்பட அக்காவின் உத்தரவுக்காக காத்திருந்தோம்.  அந்த ஆலமரத்திற்கும் பின்னால், இந்த வெயில் காலத்திலும் வற்றாமல் ஒரு ஊருனி நிறைய தண்ணீருடன் இருந்தது, களக், களக் என குதிக்கும் மீன்களுடன். இரண்டு பக்கங்கள் மட்டும் படித்துறை போல் அமைப்பு இருந்தது, ஆலமரத்தின் வலதுபக்கத்தின் எதிரே, ஒரு படித்துறையில் நிறைய பேர், குளித்துக் கொண்டும், துவைத்துக் கொண்டும் இருந்தனர்,  ஆலமரத்தின் பின்னால் இருந்த படித்துறையில் யாரும் இல்லை, ஒரே ஒரு கிழவியைத் தவிர.  ஊருனியைச் சுற்றி அங்கங்கே இடைவெளி விட்டு மரங்கள் இருந்தன, பெரும்பாலும் புளியமரங்கள், நம்பர் போட்டு, இரண்டு நவ்வாப்பழ மரமும், சில புங்க மரங்களும் இருந்தன, எனக்கு புளிய மரத்தைத் தவிர வேறு எந்த மரமும் சரியாக தெரியவில்லை, கௌஸல்யா அக்கா தான் என்னென்ன மரங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். புளிய மரங்களைப் பார்த்ததும், ரேணுகாக்கா சொல்லிய பேய் கதைகள் ஞாபகம் வந்தது.  கௌஸல்யா அக்காவிடம் என் பயத்தைப் பற்றி சொன்ன போது, அவள் குலதெய்வம் வீரசின்னம்மா இருக்கிற எடத்தில எந்த பேய் பிசாசும் வராது பயப்படாதே என்று சொன்னாள் ஒரு தேவதையாய். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, கல்லா, மண்ணா விளையாட அது தோதாய் இருக்காது என்று, ரொம்ப ரொம்ப தூரத்தில் தான் சில மண்டபங்களில் படிக்கற்கள் இருந்ததால், கல்லா மண்ணாவை கைவிட்டு, நொண்டி விளையாட முடிவு செய்தாள் அக்கா, எனக்கு நொண்டி விளையாடுவது பிடிக்கும், நாங்க எங்க காம்பவுண்டில் லீவு நாட்களின் போது, இது போல நொண்டியும், சொட்டாங்கல்லும் தான் விளையாடுவோம், எப்போதாவது, தாயமும் விளையாடுவது உண்டு. திடீரென்று ஜெயந்தியின் ஞாபகம் வந்தது, அவளும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும், ஆனா அவங்க மாமா தான் அவளை விட மாட்டேன்னு சொல்லிட்டார்.  அதுவும் நல்லது தான் இல்லாட்டி, கௌஸல்யா அக்கா கூட பழகி இருக்கவே முடியாது. ஜெயந்தி அவ கூடவே இல்லேன்னா அப்புறமா பேசவே மாட்டா, காம்பவுண்டில் எனக்கு ஜெயந்தி தான் உற்ற தோழி, புத்தகங்கள் படிப்பதும், அதற்காக சண்டையிடுவதும் அவளுடன் தான். போன வருஷம் நாங்கள் சித்திரை திருவிழா, பூப்பல்லக்கின் போது, அவளுடன் ராட்டினம் சுற்றியதும், நின்றிருந்த டிராக்டர் டிரைலரில் மறைவாய் விளையாடியதும் ஏனோ ஞாபகம் ரசமாய் வழிந்தது. இந்த அக்கா எவ்வளவு பாசமா இருக்காங்க, இவங்கள மதுரைக்கு நம்ப வீட்டுக்கு லீவுக்கு வரச்சொல்லணும்.

எல்லோரும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு, கோயிலைத்தாண்டி மீண்டும் பந்தலுக்கே வந்துவிட்டோம். அப்பா இன்னும் வந்திருக்கவில்லை, அம்மா, எங்களின் பைகள் வைத்திருந்த இடத்திற்கு அருகில் உட்கார்ந்து, சுப்பு சின்னம்மா, முனியம்மாவுடனும் பேசிக்கொண்டு இருந்தாள். எங்களைப்பார்த்ததும் எங்கடா போயிட்டு வர்றீங்க. கௌசல்யா அக்காகூட போய் விளையாடிட்டு அப்படியே ஐஸ் தின்னுட்டு வர்ரோம். யாரு வாங்கிக்குடுத்தா, நான் தான் சின்னம்மா வாங்கிக் குடுத்தேன், நான் தீப்பெட்டி ஒட்டி சேர்த்த காசுல தான் வாங்கிக்குடுத்தேன்னு நெஞ்சில் கை வைத்து பெருமையாய்ச் சொன்னாள் அக்கா.  உடனே என்னோட அம்மா, அவளுடைய பர்ஸிலிருந்து காசு எடுத்துக் குடுத்தபோது அவள் வாங்கிக் கொள்ளவில்லை. என் தம்பிங்களுக்கு தானே வாங்கிக் குடுத்தென், பரவாயில்ல சின்னம்மா, என்று என் தலைமுடியைக் கோதிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். இவ எனக்கு அக்காவா பொறந்திருக்க கூடாதான்னு யோசிச்சுக் கொண்டிருந்தேன். சிவராத்திரி முடியும் வரை கௌஸல்யா அக்காவுடன் தான் இருந்தேன், அவளும் எங்கே போனாலும் என்னை உடன் அழைத்துச்சென்றாள். ஆத்துக்கு குளிக்கப் போகும்போது, கோயிலுக்கு அம்மனின் முகவடிவு கொண்டு செல்லும்போது, முளப்பாரி எடுத்துச்செல்லும்போது, பெரிய பூஜை நடக்கும்போது, மூக்கம்மா சின்னம்மாக்கு சாமி வந்து புருஷன போடா, வாடான்னு மரியாதையில்லாமா ஆத்தாவா வைஞ்சபோது, ராஜலச்சுமி மயினி மேல மாரியம்மா ஏறி வந்து கல்யாண ஆகாத பெரிய சாந்திக்கு, கிழக்க இருந்து சம்பந்தம் வரும்னு துன்னூரை அள்ளி மூஞ்சில எறிஞ்சபோதுன்னு எல்லா நேரத்திலும் நான் அக்கா கூடவும், அக்கா எங்கூடவும் தான் இருந்தோம். எனக்கு அவங்களுக்கு சாமி வரும்போதெல்லாம் பயமா இருக்கும், அக்காவை இறுக்கி பிடிச்சுக்குவேன், அவளும் பயப்படாத சீனு, இது சாமி தான், பேய் வந்தாலும் இப்படி தான் ஆடுவாங்க, ஜெயாத்தைக்கு பேய் பிடிச்ச போது அவங்க இப்படி தான் ஆடினாங்க, மந்திரவாதியெலாம் வந்து பூஜை பண்ணாதான் அடங்கும் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன். கௌஸல்யா அக்கா அதற்கு, கோயில்ல சாமி இருக்கிறதுனால பேய் வராதுன்னு சொன்னேன்ல,  வந்தா அது சாமி தான்னு எளிமையாக விளக்கினாள், அதுக்கப்புறம் எனக்கு பேய்ப் பயம் வரலை, சில சமயம் சாமி வந்து வேப்பிலை வச்சு அடுத்தவங்கள் அடிக்கும்போது மட்டும் சிரிப்பா வந்துச்சு, அப்டியெல்லாம் சிரிக்ககூடாது, சாமிக்கு கோவம் வந்துடும் என்று கண் விரிய அவங்க ஊரில் நடந்த மாரியம்மாவின் கோபக்கதையெல்லாம் சொல்வாள்.

சிவராத்திரி முடிஞ்ச பிறகு ஊருக்கு கௌஸல்யா அக்காவை பிரிஞ்சு போகனுமேன்னு நினைக்கும்போதே அழுகை வர்றமாதிரி இருந்தது. அக்காவை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடலாமுன்னு அப்பாட்ட கேட்டுப் பார்க்கலாமான்னு எனக்கு தோனிச்சு, அப்பாட்ட கேட்டபோது நம்ம கட்டில்ல எடம் பத்தாதேடான்னு சொன்னார். நான் வேனா கட்டிலுக்கு அடியில படுத்துக்குறேன்னு சொன்னேன். அவங்கம்மா அப்பா விடனும்ல, அதும்போல அது வீட்ல இருந்து தீப்பெட்டி ஒட்டி சம்பாதிக்கிற பிள்ளை, மதுரைல தீப்பெட்டி ஒட்டுற வேலை செய்ய முடியாதே, அவ வீட்ல இருந்தா அவங்கம்மாவுக்கு உதவியா, ரெண்டு காசு சம்பாதிச்சுட்டு இருப்பா, அத கெடுக்கனுமா உனக்கு. நீ ஊருக்கு போகும்போது அவங்க வீட்டுக்கே போய் இரு, விளையாடு என்று சமாதானம் சொன்னார். எனக்கு சீட்டுக்கட்டுல கழுதை விளையாட்டு, ரம்மி விளையாட்டு என்று இந்த மூன்று நாட்களில் கற்றுக்கொடுத்துவிட்டாள். கோவில்பட்டி மாத்திரம் கொஞ்சம் பொறாமையா பாப்பான், ஏலே கொடுத்து வச்சவம்ல நீ…. கௌசல்யா அக்கா உனக்கு ஏதாவது வாங்கி கொடுத்துட்டே இருக்கு என்று புலம்புவான். கௌஸல்யா அக்காக்கும் என்னைப் பிரிவது சங்கடப்படுத்தி இருக்க வேண்டும், ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது என் வீட்டிற்கு வரவேண்டும், நீ வரலேன்னா, அவ்வளவு தான் பாத்துக்கோ, நான் உன்கூட பேசவே மாட்டேன், அத்தனை அழகாக, நுனி நாக்கை பல்லில் தட்டி தட்டி அவள் பேசியது, தலை சாய்த்து என்னை பார்த்தது, எனக்கு மேலும் அழுகை வர வைத்தது. கௌஸல்யா அக்கா எல்லாமுமாய் நிறைந்து நின்றாள், என் அப்பாவிடமும், சித்தப்பா, சீனுவை பரீட்சை லீவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி விட்டுடனும் என்று உறுதி வாங்கி கொண்டாள். அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டிய மெட்டடோர் சரக்கு வேன் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பத் தயாரானது. கௌஸல்யா வேனில் பிடித்துக் கொள்ள தொங்கிய கயிற்றைப் பிடித்துகொண்டே, சீனு லட்டர் எழுது, 113, ஆராய்ச்சிபட்டி பிள்ளையார் கோயில் தெரு, ஸ்ரீவி என்று அட்ரஸ் சொல்ல நானும் மனதில் குறித்துக்கொண்டேன், ரவியும் அதே தெருவில் இருப்பதால், டோர் நம்பர் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால், இலகுவாய்ப் போனது, எனக்கு அழுகையாய் வந்தது, கௌஸல்யா அக்காவின் வெம்மை, ப்ரியம், ஒரு மெல்லிய பாசிப்பயறும், சோப்பும் கலந்த வாசம் என்று என்னைச் சுற்றி ஒரு கௌஸல்யா பற்றிப் பெருகியிருந்தாள்.

கல்லூரி முதலாம் இரண்டாவது வருஷம் படிக்கும்போது கௌஸல்யா அக்காவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது. கௌஸல்யா அக்காவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்து கல்யாணப்பத்திரிக்கை கொடுத்ததாங்க, அம்மா சொன்னாள். கௌஸல்யா அக்காவின் ஒன்று அல்லது இரண்டு விட்ட தாய்மாமனை கல்யாணம் செய்து கொண்டாள். கௌஸல்யா அக்கா. அவருக்கு அவளை விட அதிகம் வயசாய்த் தெரிந்ததாகச் சொன்னாள், திருத்தங்கலில் கார் டிரைவராக (அவருமா?) இருப்பதாகவும், சொந்தமாக இன்னும் கொஞ்ச நாட்களில் கார் வாங்கி விடுவதாகவும் கல்யாணத்திற்கு சென்றிருந்த என் அம்மாவிடம் கூறியிருக்கிறாள். உன்னைப்பத்தி தான் ஓயாம கேட்டா, நான் தான் உனக்கு செமஸ்டர் அது, இதுன்னு சொல்லி சமாளிச்சேன், அவ மாப்பிள்ளைட்ட கூட உன்னைப்பத்தி சொல்லிக்கிட்டே இருந்தாள், நீ வந்திருக்கலாம்டா, பாவம் ரொம்ப ஏமாந்து போயிருப்பா, மணமேடைவிட்டுட்டு என்னை கவனிக்க வர்றா, எனக்கு தான் ஒரு மாதிரியா இருந்தது, என்று அம்மா, கௌஸல்யாவின் கல்யாணத்தில் இருந்து வந்ததில் இருந்து அம்மா அவளைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தாள். எனக்கு கல்யாணத்திற்கு நான் ஏன் போகாமல் இருந்தேன் என்று புரியவில்லை. மதுரையில் இருக்கும் அவள் தாய்மாமன் வீட்டுக்கு வரும்போது என்னைப் பார்க்க வந்திருக்கிறாள், வழக்கம்போல நான் இல்லாதது, அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது போலும். எனக்கும் அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. எப்படி இருந்தாள் என்று அம்மாவிடம் கேட்டதற்கு, எப்பவும் போல தான், துறுதுறுன்னு, நாக்க நீட்டி நீட்டி பேசிக்கிட்டு, சின்னம்மா, திருத்தங்கலுக்கு வாங்க, சீனுவ கூட்டிக்கிட்டு, நாங்க கார்ல தான் வந்திருக்கோம், சீனு சீக்கரமா வந்துட்டா, எங்க மாமாவீட்டுக்கு வரச்சொல்லுங்க சின்னம்மான்னு, ஒரு சூறாவளிபோல வந்தா, போயிட்டா, நீ கொஞ்சம் சீக்கிரமா வந்திருந்தா, அவ மாமா வீட்டுக்காவது போயி பார்த்திருக்கலாம், இப்படி விளக்கு வச்சு வந்தேனா, அவ இன்னேரம் போயிருப்பா, கௌஸல்யா அக்கா, கௌஸல்யா அக்கான்னு சொல்லிக்கிட்டே இருப்ப, இப்ப என்னடா ஆச்சு, அவள பார்க்கக்கூட போக மாட்டேங்கிற, நான் சொல்றதையும் அக்கறையா கேட்க மாட்டேங்கிற! என்று சலித்துக் கொண்டாள்.

பாஸ்கர், சொந்தத்திலேயே என் மாமன் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டான். அவன் கல்யாணத்திற்கு வந்திருந்தாள் கௌஸல்யா அக்கா, அவள் மகன் சீனுவுடன், என்னைப்பார்த்ததும், ஓடி வந்தாள், பார்த்தியாடா, 10 வருசம் கழிச்சு ஒன்னப்பிடிச்சிட்டேன், எப்படி இருக்கடா தங்கம், ஒன் மிஸ்ஸஸ் எங்க? ஜம்முன்னு இருக்கியேடா, அழகான்னு, திருஷ்டி வழித்தாள். டேய் மாமாவப் பார்த்தியா, மாமாவுக்கு ஒன் பேர் தாண்டா, என்று அவள் பையனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தாள். மாமா மாதிரி நல்லா படிச்சேன்னா, மாமா அவனை மாதிரியே ஒரு வேலை வாங்கி குடுப்பான், குடுப்பதானே என்று என்னிடம் உறுதி செய்து கொண்டாள். ஒன்னப் பார்க்கத்தான்டா வந்தேன், பாஸ்கர் கல்யாணம் ஒரு சாக்கு, பாஸ்கர் கல்யாணத்திற்கு வந்தேன்னு தான நினச்ச, அவன் வந்து பத்திரிக்கை வைக்கும்போதே சொல்லிட்டேன், சீனு வருவானான்னு, என்று என்னை ஒரு கையால் அனைத்தபடி பேசிக்கொண்டே இருந்தாள், சீனு என்கிற அவளுடைய பையனும், நானும் அவள் பேசுவதைக்கேட்டுக் கொண்டே இருந்தோம். திருத்தங்கல் பற்றியும், மாமாவையும் பற்றியும், விறகுக்கடை பரமசிவம், நாங்கள் புலிக்குத்தியில் சுற்றியதையும் என்று சம்பந்தமில்லாமல் கதைகள் பேசிக்கொண்டே இருந்தாள். என் மனைவி வந்து தோள் தொட்டழைக்க, கௌஸல்யா அக்காவை அறிமுகம் செய்தேன், என்னோட பெரியம்மா பொண்ணு, நம்ம கல்யாணத்துக்கு ஏன் வரலை என்று அசந்தர்ப்பமாக கேட்டாள். சீனுவுக்கு என் மேல ஏதோ கோபம், அதான் அவன் எனக்கு பத்திரிக்கையே அனுப்பவில்லை என்று கௌஸல்யா அக்கா முகத்தை பாவமாய் அழகு காட்டினாள். எக்ஸ்க்யூஸ் மீ என்று என் மனைவி கௌஸல்யா அக்காவிடம் தொந்தரவுக்கு வருந்தி அழைக்க, போயிட்டு வா சீனு, நான் சாயந்தரம் வரை இருப்பேன், என்று வழி அனுப்பினாள் கண் கலங்கிய படியே! எனக்கும் அழுகை வந்தது, என் மனைவிக்குப் புரியவில்லை.

1 comment:

☼ வெயிலான் said...

ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
சொல்லொண்ணாத் தாக்கம்.
அருமை ராகவன்.

Post a Comment