Thursday, August 27, 2009

மூன்று கவிதைகள்

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை
திருடி
என் அலமாரிக்குள்
ஒளித்து வைக்கிறேன்

காணாது
தவிக்கும்
கடவுள்
மூளைக்குள்
விஷமேறி துடிக்கிறார்

ஜோதிமயமான
கடவுள்
காற்றுவெளியில்
சில்லிட்டுப்போய்
கருத்துப்போனார்

ஒளித்து வைத்த
கடவுளின்
கனவை
எடுத்துப்பார்க்கிறேன்

கடவுளின்
கடைவாயில்
பற்கள் முளைத்து
கோரக்குருதி
வழிகிறது

மீண்டும்
அலமாரிக்குள்
வைத்து
பூட்டிவிடுகிறேன்


கவிதை (2)

பத்து
வருடங்களுக்குப் பிறகு
கடிதம்
வந்தது
உன்னிடம் இருந்து

நிறைய
எழுதியிருந்தாய்...

நீயும் நானும்
விளையாடிய,
கதை பேசிய, கனவு விதைத்த
பொழுதுகளை...

நாம் தொடர்பற்று
இருந்த
நாட்களின்
சிறு குறிப்பும்
இல்லை
உன் கடிதத்தில்

மடித்து வைக்கிறேன்
உனக்கு பதிலாய்
நம் பழங்கதைகள் பேச...

கவிதை (3)

சொந்தமாய்
வீடு வாங்கி
குடிபுகுந்தேன்
ஒரு நகர அடுக்ககத்தில்..!

அப்பா
வந்திருந்தார் வீட்டுக்கு...

என் மகனிடம்
உங்க அப்பா
சின்ன குழந்தையாய்
இருந்த போது
சூரிய, சந்திர,
நட்சத்திரங்களுடன்
வானம் இருந்தது...

புழுதி அப்பிய
மண்ணும் இருந்தது...
மழை நனைக்கும்
தாழ்வாரம்
இருந்தது...

ஆனால்
சொந்த வீடு இல்லை

உன் அப்பாவிற்கு
சொந்த வீடு
இருக்கிறது....

பொய்யாய்
பழங்கதையாய்....

(எனது மேற்கண்ட 3 கவிதைகளும் நவீன விருட்சத்தின் பதிவுலகில் பிரசுரமாகியுள்ளது)

Wednesday, August 19, 2009

மொட்டபாற முனீஸ்வரன்....மல்லாங்கிணறு


மொட்டப்பாற முனீஸ்வரனுக்கு
நேர்ந்து விட்ட
வெள்ளாட்டங்குட்டி
காணாமப் போனதில்
பதறிப் போனா ஆத்தா…

சாமிகுத்தம் சடக்குன்னு தீர
ஈஸ்வரியம்மா சொல்ல
குறி கேட்ட உள்ளூர் கோடங்கியும்

சாவலும் சாராயமும்
படையலுக்கு வைச்சா..
கருப்பு காட்டிக் கொடுப்பான்னு…

கோடங்கி மேல
ஏறி வந்த கருப்பும்
மனசெறங்கி
ஏலாம் நாள்ல
வாசக்கால் வரும்னு….

வாரம் கடந்து போச்சு…

மய்க்கா நாளே
மிளகியும் வந்து நின்னா…
வாசலிலே
அத்த! அம்மா கறிக்குழம்பு
குடுத்தாகன்னு….

Tuesday, August 18, 2009

பிறழ்வு...

தவனைக்கார முருகனை
அண்ணே! என்று
தனியே இருக்கையில்
தவறுக்கு ஒதுங்குவாள்
அகல்யா அக்கா…

மர்ஃபி ரேடியோ,
மயக்கும் செண்ட்,
மஸ்லின் துணி ரவிக்கை
என்று கல்யானத்திற்கு
களவுப்பொருள்
சேர்ப்பாள்

சைக்கிள் மணிச்சத்ததில்
சங்கேத பாஷைகள்
கொலுசொலிக்கு
புரிந்து போகும்
பண்டமாற்று அரங்கேறும்
முன்மாலைப்பொழுதுகளில்
பழம்புடவை பட்டுகளாய்,
பழங்கதைகள்
நிகழ்கனவாய்,
கறைகளும் வண்ணங்களாய்..

வடித்த சோறு
வட்டியில்
உறித்த கோழி
அடுப்பினில்
ஞாயிறு விருந்துகளில்
செரிக்க வெற்றிலை தேடும்
உறவு

இன்னும் சில....

நானற்று..

என்னுடைய
கவிதைகளில்
நானில்லாமல்
இருக்க
எப்போதும் மெனக்கெடுகிறேன்….

யாருடைய
வரிகளையோ
தெரிவு செய்து
அதை அடுக்கி உயர
கோபுரமாய் ஆக்குகிறேன்

பிறர்
உணர்வுகளில்
முலாம் தடவி
அவைகளை
நெட்டி பொம்மைகளாய்
நிறுவுகிறேன்

சொற்களின்
வீர்யத்தை, வீச்சைக் குறைத்து
என் வர்னங்களை
முற்றிலுமாக அழிக்கிறேன்

சரியாமல் இருக்க
உங்களின்
சுவாரசியங்களை
அனுபவங்களை
வஜ்ரமாய்க் கொண்டு
உறுதி செய்கிறேன்

கவனமாய்
செய்தாலும்
என் கைரேகைகள்
மிச்சமாகின்றன..

இந்த கவிதையிலும் கூட

கவிதைகள்

பிரிய சிநேகிதிக்கு...

இலக்கியவாதிக்கான
எந்த
அடையாளாங்களும்
இல்லை எனக்கு

விடிய விடிய
பீடி வலிப்பதிலும்
பேச்சு சுவாரசியத்திலும்
கழிவதில்லை
பொழுதுகள்

கிழக்கு, மேற்கு
வடக்கு, தெற்கு என்று
திசைகள் எங்கும் அலைந்து
மொழி பெயர்ப்பில்,
மொழி மாற்றத்து இலக்கியங்களில்
பரிச்சயம் இல்லை
எனக்கு

தமிழில் எழுதும்
சிலரைத் தவிர
வேறு எவர் பெயரும்
அறியாதிருக்கிறேன்..

அந்நிய திரைப்படங்கள்
இசை, புத்தகங்கள்
எதிலும் ஆர்வமில்லை எனக்கு
அந்நியப்பெயரில் யாரையும்
எதையும்
தெரியாது எனக்கு

கையில்
காசே இல்லாமல்
சாப்பாடு பற்றிய பிரக்ஞை இல்லாமல்
உடுத்திய உடையுடன்
ஊர் சுற்ற பழகியதில்லை

தேடிச்சென்று
பேர் பெற்ற இலக்கியவாதிகளை
சந்திக்க முயன்றதுமில்லை

நவீன இஸங்கள்
பின்முன் நவீனங்கள்
அமைப்பு சாரா சாரும்
இடம் வலம்
லத்தீன் கிரேக்க ருஷ்ய
தத்துவங்கள்
பாசிச, பூர்ஷ்வ, நாசிசம்
எதுவும்
பழகவில்லை

அகம், புறம்
குறுந்தொகை, கலித்தொகை
புலம் பெயர்ந்தவர்கள்
புரட்சி இலக்கியம்
மார்க்ஸ், எங்கல்ஸ்
பொருளாதாரம், அரசியல்,
தத்துவ சித்துகள்
எதுவும்
புரிவது இல்லை எனக்கு

பட்டறைகள்,
பாசறைகள்
கவியரங்கங்கள்
நிலாமுற்றம், பயிலரங்கு
விவாதமேடைகள்
கருத்துப்பெட்டகம், கனையாழி,
காலச்சுவடு, விருட்சம்
கவலையில்லை எனக்கு

உனக்கு
பிடித்தமாய்
உன்னைப்பற்றி
உன்னிடம் பேச
நிலா, மழை, வானவில்
பூக்கள், மலை, மேகம்
வாரமலர் கவிதைகள்,
இளையராஜா, பாலகுமாரன்
பாக்யராஜ், வைரமுத்து
குமுதம், விகடன்
என்று கதைபேச
வியப்பிலாழ்த்த!

அப்பா!
சீனுவுக்கு எவ்வளவு
தெரியுது
என்று
உன் புருவ உயர்த்தல்களும்
உதட்டுச் சுழிப்பும் போதும் எனக்கு…

இலக்கியவாதியாகும் ஆசை எப்போதும் இல்லை எனக்கு