Monday, August 6, 2012

நான் ஒரு இரங்கற்பா
கொண்டு வந்திருக்கிறேன்

அவன் உடல் இருக்கும் பெட்டியை 
காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்
அலங்காரமான பெட்டி
முழுதும் ரோஸ்வுட்டினால் 
ஆனதாய் இருந்தது
அழகான உயர் துப்பாக்கி உலோகமும்
க்ரோமியக்கலவையுமான 
பூக்களும் கொடியும் பெட்டியைச்சுற்றி
அவனை இறுக்கிக் கொண்டிருக்கக்கூடும்
நான் இரங்கற்பாவை படிக்க ஆரம்பித்தேன்
இறந்தவனைப் பற்றி எனக்கு
அனேகம் தெரியுமென்றாலும்
எனக்கு தெரியாதவைகளைப் பற்றியே
பாடிக் கொண்டிருந்தேன்
சுற்றி நின்று சவப்பெட்டியின் நேர்த்தியை
வியந்து கொண்டிருந்தவர்கள்
தெரியாதவைகளை பாடும் போது
கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தார்கள்
ஆனால் எதுவும் சொல்லவில்லை
அவர்களுக்கான இரங்கற்பாக்களும்
என்னிடம் இருக்கலாம் என்றும்
அதில் அவர்களுக்கும் பிறருக்கும்
தெரியாதவைகளும் இருக்கக்கூடும் என்றும்
ஆசுவாசம் கொண்டார்கள்
அழகிய சவப்பெட்டி இறந்தவனுடன்
புதைக்கப்பட்டது.