Thursday, September 17, 2009

மணிகண்டனுக்கு...

யாதும் ஊரே


06-08-2009

உனக்கு நீண்ட நாட்களாய் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன், இப்போது நேரம் வாய்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். முடிக்கும் வரை நிச்சயம் இல்லை என்றாலும் ஆரம்பிக்க நேரம் வாய்த்ததே ஒரு நல்ல அறிகுறி தானே! ” a well begun task is half completed” என்று சுலபமாய் சொல்லி விடலாம் தானே! படிக்க நேரம் வாய்க்கிறது, அதை சுவாரசியமாய் பேசுவதற்கு, அசை போடுவதற்கு பிரத்யேக நேரமில்லாவிட்டாலும், படிக்கும் போதே சிலிர்க்கவும், வியக்கவும், சீந்தவும் முடிகிறது. சில சமயம் படிக்கின்றபோது வாய்க்கின்ற முழுமை இது போன்ற அலசி, ஆராயும் புத்தியில் அகப்படாமல் போனாலும் ஒரு அரைகுறையான திருப்தியை கொடுக்கிறது.

உனக்கு எதைப்பற்றியும் குறிப்பாக பேசாமல் இதுபோல் வெட்டிச்சரடு விடுவது (அல்லது ஜல்லி அடிப்பது) எந்தவித முகாந்திரமும் இல்லாமல் செய்யமுடிகிறது. ஏன் எழுதுகிறேன் என்று தெரியாமல், கொஞ்ச நேரம் முகத்தைப்பார்த்துக் கொண்டு, விரல் நகங்களைப் பார்த்துக் கொண்டு, மோட்டு வளையத்தை பார்த்து கொண்டு தேமேன்னு உட்கார்வது போல, ஒரு மோனைத்தவம் (!?) போல வாய்க்கிறது எனக்கு. சொன்னா யாராவது இல்லை எல்லோருமே சிரிப்பார்கள்! எனக்கு கதை சொல்லிகளுக்கான அடையாளங்கள் இல்லை தகுதிகள் இருக்கலாம், கதைசொல்லியாக மாற வேண்டும் என்ற உந்துதல், ஆசை, அடிமனதில் ஒரு undercurrent போல ஓடிக்கொண்டு இருக்கலாம், அதுமேல வர்றதுக்குள்ள ஏதேதோ பூதம் கிளம்பி புதையலை மறைச்சுடுது.

கதை சொல்லிகள், கி.ரா. மாதிரி யாராவது ஒரு ஆளு கதை சொல்ல முடியுமான்னு தெரியலை. எனக்கும் வண்ணதாசன், நாஞ்சில் நாடன், இரா.முருகன், வண்ண நிலவன் இவர்கள் எல்லோருமே ஒரு தேர்ந்த கதைசொல்லிகளின் இலட்சணத்தை கொண்டிருக்கிறார்கள். கோணங்கி பற்றிய எஸ்.ரா வின் சிலாகிப்பு ஆச்சர்யமாய் இருக்கிறது. கோணங்கியின் கதை சொல்லிக்கான அடையாளங்கள் அவரின் மதினிமார்களின் கதை  அதிகம் பேசப்பட்டது என்று நினைவு. நிறைய பேர் எழுதுகிறார்கள் இப்போது தென் மாவட்டங்களில் இருந்து. திருநெல்வேலி சைவ பிள்ளைமார்களின் கையில் இருந்து மதுரை, இராமனாதபுரம், விருதுநகர் என்று தென் கிழக்கு மாவட்டங்களுக்கு மாறியது கி.ரா வின் வரவுக்கு அப்புறம் என்று இருக்கலாம். சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மல்லாங்கிணறு உட்பட இன்ன பிற ஊர்களில் இருந்தும் இலக்கியம் வியர்வையையும், புழுதியையும், மனிதர்களையும் மேலும் மனிதர்களையும் தன்னுடைய கதைக்களமாய், கதை மாந்தர்களாய் உள்கிரஹிக்க ஆரம்பித்தது. பொதுவாகவே வேளாண்மையை தொழிலாய் கொண்ட சமூகம் கதை சொல்வதில், கதை வாசிப்பதில், கதை வளர்ப்பதில், கதை கேட்பதில் நேரம் செலவிட கை நிறைய சந்தர்ப்பங்கள், சம்பவங்கள் வைத்திருந்ததன் காரணங்களாக இருக்கலாம் இது போல கதை சொல்லிகள் வந்ததற்கு. கி.ரா., கு.அழகிரிசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுசாமி, பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், கோணங்கி என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

எனக்கு கதைசொல்லிகள் என்ற concept என்னவென்று தெரியும் முன்பாகவே, சில கதை சொல்லிகள் சுவாரசியமாய் இருந்திருக்கிறார்கள். நான் எட்டாவது படிக்கும் வரை அழகர்சாமி நாயுடு காம்பவுண்டில் தான் இருந்தோம் என்பது உனக்கு சொன்னதாக ஞாபகம் என்று நினைக்கிறேன். அங்கு முத்தையா ஆசாரி தவிர மற்ற எல்லார் வீட்டு ஆண்களும் ஒரு அரசாங்க உத்யோகத்தில் அல்லது ஏதோ ஒரு ஆபிஸ் உத்யோகத்தில் இருந்ததால் வார நாட்களின் பகல் நேரம் அவர்களை அறியாமல் இருந்தது. காலை 11 மணி காட்சிக்கு ஒரு கும்பல் மீனாட்சி தியேட்டருக்கோ அல்லது நியூசினிமாவுக்கு செல்வதுண்டு, இவர்கள் கணவருக்கு தெரியாமல் சென்றது மாத்திரமே அதிகம். இவற்றுள் நமக்கு முக்கியமானவர் கொட்டாம்பட்டி ரேணுகா மாத்திரமே (எங்கள் காம்பவுண்டில் இரண்டு ரேணுகாக்கள் உண்டு, அடையாள அங்கதத்திற்காகவும், சம்பாஷனைளுக்காகவும் அவர்களை ஊர் பெயருடன் சேர்த்து குறிப்பது வழக்கம்., ஒருவர் காட்டூரணி ரேணுகா நம்மவர் கொட்டாம்பட்டி ரேணுகா) ரேணுகாக்கா ஒரு சினிமா பார்த்து விட்டு வந்தால் காம்பவுண்டில் உள்ள என்னைப் போன்ற கதை விரும்பிகள், கேட்பாளர்களுக்கு கொண்டாட்டம். பின்மாலை சுமார் 7 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்தால் 2 மணி நேரம் வரை செல்லும், பரீட்சை நேரங்களில் ரேணுகாக்கா கண்டிப்பாக கதை சொல்லுவதில்லை, ரேணுகாக்கா கதை சொன்னா அந்த படம் பார்க்கிறதை விட சுவாரசியமாக இருக்கும். அந்தக்கா கதை சொல்லும் போது அவருடன் படம் பார்த்தவர்கள் கூட திரும்ப வந்து உட்கார்ந்து கதை கேட்பதுண்டு. ஒரு சினிமாவின் அத்தனை கனபரிமானங்களையும் தனது குரல், கண்கள், கைகள், உடலசைவு மூலம் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுவார். என்னுடைய மறக்க முடியாத அனுபவம் ஜகன் மோகினி கதை கேட்டு காய்ச்சல் வந்து அனத்தினது தான். விட்டலாச்சரியா தூவ மறந்த அத்தனை மசாலாக்களும், அதன் திடுக்கிடலுடன் இருந்த்து. அதன் பிறகு அதே படத்தை நான் தியேட்டரில் பார்க்கும் போது எனக்கு ஒரு நல்ல நகைச்சுவை படத்தை பார்த்தமாதிரி தான் இருந்ததே ஒழிய ஒரு பேய்ப்படம் பார்த்த மாதிரி இல்லை.

பேய்பற்றிய கதைகள், பார்த்த, உணர்ந்த, கேட்ட கதைகள் பற்றி கதையாய் சொல்லும் போதும் எல்லோரையும், கட்டிப்போட, வாய்பிளந்து ஏன் என்று கேள்வி கேட்காமல் அது எப்படி நடக்கும் என்ற ஒரு புத்தியும் இல்லாமல் சுவாரசியமாக கதை கேட்போம் அலுப்பே தட்டாமல்.

எதிர் வீட்டு ஜெயாத்தைக்கு பேய் பிடித்த போது எல்லா பெண்களும் பயந்து வீட்டை விட்டு வெளிவருவதில்லை. என் அம்மா, பெத்தம்மா, நாகத்தை, மாலாக்கா, தனம், அமுதாம்மா என்று யாரும் போவதில்லை. ஜெயாத்தையின் அக்கா யசோதாத்தையும், தாயம்மா கிழவியும், எதிர் காம்பவுண்டு சுப்பக்காவும், பேய் ஓட்ட வந்த மந்திரவாதியும் (சிவகங்கையில் இருந்து பேய் ஓட்ட வந்தார்… பஸ் சார்ஜும், சாவலும், 5 ரூபாயும் – (காணிக்கையாய் /காணிக்கைக்காய்) மட்டுமே இருப்பார்கள். இந்த பேய் பிடித்த கதை கூட ரேணுகாக்கா சொல்ல கேட்டுத் தான் தெரியும் எங்களுக்கு. ஜெயாத்தை எங்களுக்கு நிறைய விபரம் தெரிந்து கேள்வி கேட்பதற்கு முன்பாகவே இறந்து விட்டார். ஆனால் அவர்கள் இறந்து போனது Brain Tumour-ல் பிச்சம் மாமா ஜெயாத்தை ரெண்டு பேருக்கும் குழந்தை கிடையாது. ஓரளவு படித்த மத்திய அரசாங்கத்தில் வேலை செய்யும் ஒருவர் தன் மனைவியை பேய் பிடித்ததாக பிறர் கூறும் கூற்றை நம்பி அதற்கு மந்திர, தந்திர, மாந்திரீகத்தில் சரி பண்ண ஒப்புக்கொண்டது ஆச்சர்யமாயிருக்கும். ஆனால் உடல் பெருத்த ஜெயாத்தை மேல் ப்ரியம் குறைந்து விதி வசத்தால் மனைவி இறந்து விட்டாள் என்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி ஜெயாத்தையை கொஞ்சம் கொஞ்சமாக கொன்தோ என்று கூடத் தோன்றும் சில சமயம்.

எனக்கு இப்போது சரியாக ஞாபகம் இல்லை, நீ பாட்டி வீட்டில் 2 வருடங்கள் படித்திருப்பாய் என்று நினைக்கிறேன். திலகம் பின்னி திருமணத்தின் பிறகு, பாட்டிக்கு துனையாகவோ அல்லது உன் தொல்லை தாங்க முடியாமலோ உன்னை மல்லாங்கினறு சென்று படிக்க அனுப்பியது (எந்த புத்திசாலியின் முடிவோ) எனக்கு தெரியலை, உனக்காவது தெரியுமா? நீ மல்லாங்கினறில் இருந்த சமயம் உன் வீட்டில் இரண்டு மூன்று முறை வீடு மாறி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உனக்கு தெரியுமா? சுப்பிரமணியபுரத்தில் ஒரு வீட்டிலும் இருந்தார்கள்.

உன் வீடுகளில் எனக்கு நிறைய ஞாபகத்தில் இருப்பது போலீஸ் லைன் வீடு, ஆண்டாள்புரம் வீடு, சுந்தரராஜபுரம் வீடும் தான். ஆண்டாள்புரம் வீட்டில் இருந்த போது தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள், நீயும், உன் அக்காவும். உங்கள் வீட்டில் மட்டும் தான் நீங்கள் போலீஸ் லைனில் இருந்த காலம் முதலே கல்கண்டு புத்தகம் வாங்குவீர்கள். குமுதமும் வாங்கினாலும், கல்கண்டு வாங்குவது எனக்கு அபூர்வமாய்த் தோன்றும். நிறைய வீடுகளில் குமுதம், விகடன் வாங்குவார்கள். ஆனால் கல்கண்டு மிக அரிது. ராண்டார் கை, தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் என்று அறிமுகப்படுத்தியது நீங்கள் தான்.

ஆண்டாள்புரத்தில் இருந்த போது தான் என்னை EB மலைக்கு கூட்டிச்சென்றீர்கள். சுவற்றில் டார்ச் அடித்து ஸ்லைடு காட்டியது, ஜெயராம், ஜெயலட்சுமியின் திருவிளையாடல்கள் அங்குதான் அரங்கேறியது. அப்போது குமுதத்தில் வந்த ஒரு சுஜாதாவின் தொடர்கதை பற்றி அதிகம் பேசுவீர்கள் (பிரிவோம் சந்திப்போம் அல்லது நிறமற்ற வான்வில்லோ ஞாபகம் இல்லை) எனக்கு சுஜாதாவை எப்படித்தான் படிக்கிறார்களோ என்று தோன்றும். நானும் ஜெயந்தியும் அப்போது படிப்பது, சண்டைபோடுவது எல்லாமே அம்புலிமாமா, பாலமித்ரா, தினமணி கதிருக்காகவும் தான் இருக்கும். விகடனின் அறிமுகம் இருந்தாலும் எனக்கு தொடர்கதை படிக்க பிடிக்காது, ஜெயந்தி தான் படித்துவிட்டு சில சமயம் கதை சொல்வாள். நீயும் கிரிஜாவும் பூவிலங்கு படம் பார்த்துவிட்டு வந்து கதை சொல்லியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. எல்லோரையும் விட உன் வீட்டில் அதிகம் பழகியது புழங்கியது நானாகத் தான் இருக்கும்… எனக்கும் உங்கள் வீடு மாத்திரமே…


லதா, விஜி, பாபு எப்போதும் விருந்தினர்கள் போல் தான் படும் எனக்கு… உனக்கு எப்படியோ? நமக்கு இருவருக்குமான அடையாளம் ஒன்றாய்த்தான் இருக்கும் அப்போதைய நாட்களில்…சீனி-மணி என்று தான் எப்போதும் ஒன்றாய் விளையாடிய, விளையாடத் துடித்த, ஆவலாய் அறியத்துடித்த வயதுகளில் ஒரு குறியீடாய் இருந்ததாக நினைக்கிறேன். எல்லா இடங்களிலும், நாம் பேச, பழக, ரகசியமாய் பேசி சிரிக்க பெண்கள் இருந்திருக்கிறார்கள். நாம் அதிகம் சினேகமானது கொக்கொக ரகசியங்களை, கதைகளை, கதை நாயகிகளை பேசிப் புணர்ந்த போது தான். உனக்குத் தனியாகவும் எனக்கு தனியாகவும் நிறைய சினேகங்கள் இருந்தாலும் உனக்கும் எனக்குமான நட்பு எதிலும் வகைப்படுத்தமுடியாமல் ஒரு தினுசாய் புதிதாய் குடி புகுந்த வீட்டுக்கருகில் வசிக்கும் ஒரு அழகான சினேகமான சமைந்த குமரியைப் போல.

1 comment:

☼ வெயிலான் said...

மணிகண்டனைப் பற்றிய விபரங்கள் இல்லையென்ற போதும், காம்பவுண்டு வாழ்க்கையின் நிகழ்வுகள்.

எதிர் வீட்டு ஜெயாத்தை போன்ற அன்னிய உறவுகள்
அருமை ராகவன்.

இப்போதும் ஊரில் இது போன்ற காம்பவுண்டுகளும், உறவுகளும், நிகழ்வுகளும் இருக்கிறதா?

Post a Comment