Thursday, September 10, 2009

வீரலட்சுமி தியேட்டரும் விவேக சிந்தாமணியும்


கல்லூரியில் அப்போது நாங்கள் பி.காம் முதல் வருடம் படித்து கொண்டு இருந்தோம். முதல் முறையாக செமஸ்டர் எழுதுவதால் எங்களுக்கு அதை எதிர் கொள்வதற்கு இரவில் காலேஜ் கிரௌண்டில் சேர்ந்து படிக்க முடிவு செய்தோம். அது போல் படிக்கும் கோஷ்டியில் அநியாயமாக நானும் இருந்தேன். படிப்பை தவிர பாடங்களை தவிர இன்ன பிற விஷயங்களை தெளிவாக பேசுவோம். இதில் நான், குருமூர்த்தி, பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படிக்கும் கோச் சரவணன், பிசிக்ஸ் கார்த்தி, எப்போதாவது மணிவண்ணன், கரிசல்குளம் கார்த்தி, டி ஆர் ஒ காலனியில் இருந்து சங்கர், எல்லீஸ் நகர் ராதாகிருஷ்ணன், டோபர் என்கிற கிறிஸ்டோபர், மாப்பாளயம் இப்ராகிம் எல்லோரும் கூடி படிப்பதாக கதை பண்ணி கொண்டு.. இரவு முழுதும்  கொட்டம் அடிப்போம். 
கையில் இருக்கும் சில்லறைகளை திரட்டி எல்லோரும் ஜெய்ஹிந்த்புரம் இரண்டாவது மெயின் ரோடில் இருக்கும் மதுரை முனியாண்டி விலாஸ் புரோட்டா கடையில் இரவு உணவை முடித்து கொண்டு...காலேஜ் கிரௌண்டுக்கு திரும்புவோம்.  பாலிடெக்னிக் பக்கத்துக்கு தெருவில் நுழைந்து தான்  ஜெய்ஹிந்த்புரம் இரண்டாவது மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டும்.  அந்த ரோட்டில் நிறைய சினிமா தியேட்டர்களின் போஸ்டர்  ஒட்ட பாலிடெக்னிக் சுவர் வாகாய் தன் முதுகை காட்டி கொண்டு நின்றிருக்கும். முருகன் தியேட்டர், ஜெகதா தியேட்டர், நடராஜ், மது தியேட்டர்கள் என்று பல தியேட்டர்களின் போஸ்டர்கள் அங்கு தான் சங்கமம் ஆகும். மது தியேட்டர்களில் எப்போதும் பக்தி படங்கள் போடுவது தான் வழக்கம்.  அன்றும் எண்டே காமுகியில் பழைய நடிகை பிரமீளா பிரா கொக்கியை கழட்ட முயல்வது போன்ற போஸ்டரை பார்த்தவுடன் பயகளுக்கு பக்தி படம் பக்கம் பேச்சு திரும்பியது. எங்களில் அதிகம் சினிமா பார்க்கும், அதிக கற்பனைத்திறன் உள்ள டோபர் எப்போதுமே போஸ்டர் பார்த்தவுடன் கதை சொல்லி விடுவான் எந்த மொழியாக இருந்தாலும்... தன் அனுபவத்தில் இது போன்ற படங்களில் ஒரு சீன் கூட இருக்காதுடா மாப்ள!மிஞ்சி மிஞ்சி போனா பைய மட்டும் தான் காட்டுவாய்ங்க!  (பை என்று குறிப்பிடுவது எதுவென்று தெரிந்திருக்கும் உங்களுக்கு)...என்று அதிகம் உணர்சிவசபட்டிருந்த கார்த்தியிடம் சொன்னான். 

எங்கள் எல்லோருக்குமே இது போன்ற ஒரு படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆவலாதி அதிகமானது..கொக்கோக புத்தகங்களும், சரோஜாதேவிகளும் போதுமானதாய் இல்லை, அதனால் இந்த செமஸ்டர் முடிந்தவுடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பக்தி படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.  டி ஆர் ஓ காலனி சங்கர், மூனுமாவடி தாண்டி இதற்காக ஒரு டூரிங் தியேட்டர் இருப்பதாகவும், அதில் போடும் பக்திப் படங்களில் உத்திரவாதமா இரண்டு சீனாவது இருக்கும் என்று உறுதி அளிக்க நாங்கள் எல்லோரும், கடைசி பரீட்சை முடிந்ததும் போவதாக முடிவு எடுத்தோம்.. தூரம் ஒரு பெரிய கவலையாய் இருந்தது...மதுரையில் இருந்து ஒரு 16 கி.மீ. இருக்கலாம், ஆனாலும் சைக்கிளில் போய் விடலாம் என்ற டோபரின் யோசனை எங்களுக்கு சரியென பட்டது.. வர்த்தக பொருளாதாரம் பரீட்சை வரும் நாளுக்காய் காத்திருந்தோம்..பரீட்சை நாளும் வந்தது, என்ன எழுதினோம் என்று பெரிதாக அக்கறை இல்லை. பரீட்சை ஹாலை விட்டு வந்ததும் எங்கள் கோஷ்டி மட்டும் பிரிந்து வர்த்தக பொருளாதாரம் பற்றி அல்லாது... பக்தி படம் பார்க்க உண்டான ஏற்பாடுகளில் ரகசியமாய் அலைந்தது... எல்லோரும் பரீட்சை ஹாலை விட்டு சீக்கிரமாக வந்தது போல் தோன்றியது..

எல்லோரும் கொண்டு வந்த பணத்தை பொருளாதாரத்தில் நிபுணனான குருமூர்த்தியிடம் கொடுத்தோம்.. மொத்தம் நூற்றி அறுபது ருபாய் கலெக்க்ஷன் ஆனது. தியேட்டரில் என்ன படம் என்று கூடத் தெரியாது... போகும்போது சாப்டுட்டு போகலாம், சைக்கிள் மிதிக்க தெம்பு வேணும் என்று, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரில் உள்ள வசந்தம் ரெஸ்டாரன்டில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற ராதாகிருஷ்ணனின் முடிவில் யாருக்கும் ஆட்சேபம் இருக்கவில்லை.  என்னிடம் சைக்கிள் இல்லாததால் நான் குருமூர்த்தியின் சைக்கிளில் வழக்கம் போல் ஏறி கொண்டேன், நான் எப்போதுமே குருமூர்த்தியின் சைக்கிளில் வருவது தான் வழக்கம் அதற்கு காரணம் அவன் என் வீட்டிற்கு அருகில் இருப்பதால் கூட இருக்கலாம், என்னுடைய எல்லா ஊர் சுற்றும் தேவைகளையும் குருமூர்த்தியும் அவன் சைக்கிளும் பார்த்துக் கொண்டனர்... சைக்கிளுக்கு டிரைவர் வச்சிருக்கிற ஒரே ஆள் நீ தாண்டா! என்று கரிசல்குளம் கார்த்தி அடிக்கடி கிண்டலாய்ச் சொல்வதுண்டு... ஆக எல்லோரும் விரைவாக மிதிவண்டியை மாற்றி மாற்றி மிதித்து வசந்தம் ரெஸ்டாரன்டில் நுழைந்தோம்..11 பேருக்கு 8 ரூபாய் ஒரு மீல்ஸ் என்ற கணக்கில் 88 ரூபாயும் 2 ரூபாய் டிப்ஸும் போக மிச்சம் சினிமாவுக்கு போதுமானதாய் இருக்கும், 20 நிமிஷத்துக்கு மேல நேரம் எடுக்க கூடாது, லேட்டா போனா படம் போட்டுடுவான்னு மிரட்ட எல்லோரும் அவசரமாய் சாப்பிட்டு முடித்தோம்.. டபுள் பெடல் போட்டு முனுமாவடியை நோக்கி ரெக்கை கட்டி பறந்தது சைக்கிள்கள். கே. புதூரையும் தாண்டி போக வேண்டும் மூனு மாவடிக்கு, கொசவாகுளம் புதூரை நான் இதுவரை தாண்டியதில்லை, என் அத்தை பெண்ணுக்கு கல்யாணம் ஆகி அவள் புதூரில் தான் குடியிருந்தாள், 4 வருசத்துக்கும் முன்னால் தான் இந்த பக்கம் வந்தது, அதன் பிறகு இப்போது தான் வருகிறேன்.

என்ன படம்னு கூட தெரியாது... ஆனாலும் பெயர் முக்கியமாய் படவில்லை யாருக்கும்.. பெயராடா முக்கியம்னு... பாஷையும், பெயரும் இதற்கு தேவையில்லை என்று ராமானுஜன் மாதிரி பதில் சொன்னான், இப்ராகிம். கொசவாகுளம் புதூரையும் தாண்டி ஒரு 4 கிலோ மீட்டரில் இடது பக்கம் சடாரென்று திரும்பி நகரம் தின்று துப்பிய ஒரு வயல்காட்டுக்குள் சங்கர் எங்களை வழிநடத்த நாங்களும் ஒரு அட்வென்ச்சர் ரேஞ்சுக்கு பின் சென்றோம்.. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஒவ்வொருவரிடமும்.. அதைப்பற்றியே அது சம்பந்தமான அனுபவங்களின் விவரிப்பு மாத்திரமே வழியெங்கும் வயலெங்கும் விதைத்து கடந்தோம்.. அதோ தெரியுது பாருங்க அதான் வீரலட்சுமி தியேட்டர், அப்போது தான் அந்த தியேட்டரின் பெயரே தெரிந்தது... நிறைய பெரிசுகள், தலையில் முண்டாசு கட்டி கொண்டு வயலுக்கு வேலைக்கு போவது போல் தியேட்டரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.. தியேட்டரை நெருங்கியவுடன் தான் தெரிந்தது... மதுரையே திரண்டு வந்தது போல சைக்கிள்கள்,  டிவிஎஸ் 50, M80 என்று ஏகப்பட்ட வண்டிகள் எல்லோருமே மதுரையில் இருந்தும் சுற்றுப்புற ஊரிகளில் இருந்தும் வந்து இருக்க வேண்டும்.. அவ்வளவு பிரபலமான தியேட்டரா இது என்று எங்கள் எல்லோருக்கு ஆச்சரியம். 

எங்களைபோலவே நிறைய பள்ளி கல்லூரி மாணவர்கள், யுனிபார்மிலும் இருந்ததாக ஞாபகம்.  எங்களுடைய சீனியர்களும் தியேட்டருக்குள் இருக்க, கைகுலுக்கி நட்பானோம்.  அப்போது தான் கவனித்தோம் என்ன படம் என்று... உர்சுலா ஆன்ட்ருஸ் நடித்த லோடட் கன்ஸ் என்ற ஆங்கில படம்... உர்சுலா வெள்ளைவுடையில் அரைகுறையாய் தெரிய எனக்கு லேசா காய்ச்சல் வரமாதிரி இருந்தது..ராதாகிருஷ்ணன் உடனே உர்சுலா ஆன்ட்ருஸ் நடித்த இன்ன பிற படங்களை பட்டியல் இட்டு கதை சொல்ல ஆரம்பிக்க...அவனை அடக்கி எல்லோரும் டிக்கட் கௌண்டரை நோக்கி ஓடினோம். குருமூர்த்தி எல்லோருக்கும் ஆறு ரூபாய் டிக்கட் எடுக்கலாம், அது தான் ஹை கிளாஸ் டிக்கட் போல... என்று கொஞ்சம் சில்லறைகளை இன்டர்வெல்லில் கொறிக்க உதவும் என்று பத்திர படுத்தினான்.  தகர சீட்டில் வேயப்பட்ட கூரை,  பெரிய சாக்கு துணிகளே திரைகளாய் தொங்கி கொண்டு இருந்தது ஏகப்பட்ட வெளிச்சப்பொத்தல்களுடன்... 6 ரூபாய்க்கு வாங்கிய டிக்கட்டிற்கு 2 ரூபாய்ன்னு போட்டிருந்த டிக்கெட்டை கவுண்ட்டர்க்காரன் கொடுத்தான்.. குருமூர்த்தி என்னவென்று நியாயம் கேட்க வேணுமா வேணாமா என்று கேட்க... டேய்! நாங்க என்ன கணக்கா கேட்க போர்றம் பேசாம வாங்கிட்டு வாடான்னு கார்த்தி சொல்ல அவனும் முனகி கொண்டே வாங்கினான்... திரை விலக்கி தியேட்டருக்குள் நுழைந்த போது மெத்தென்று ஆத்து மணலில் கால் வைத்து இறங்கினோம், ஹை கிளாஸ் டிக்கெட்டுக்கு ஆத்துமணலில் மடக்கு சேர் தான் சீட். 3 ரூபாய் டிக்கெட்டில் வெறும் ஆத்துமணல் மாத்திரமே. ஆண் பெண் என்று எந்த பிரிவும் அந்த தியேட்டரில் இருக்கவில்லை. வேறு மாதிரி படங்களே அங்கு போடுவதில்லை போல. உள்ளே நுழைந்ததும் யாரோ ஒருவரின் கனவுக்குள் வந்து விட்டது போல, எங்கும் புகைமண்டலம், தியேட்டரே பற்றி எரிவது மாதிரி அநேகமானோர் பீடியோ, சிகரெட்டோ தத்தமது வசதிக்கு ஏற்ப பிடித்து கொண்டு இருமி கொண்டும், காறி துப்பிகொண்டும் இருந்தனர்.   மணல் எல்லாவற்றுக்கும் ஏதுவாய் இருந்தது... எல்லோரும் இருக்கை தடவி உணர்ந்து அமர்ந்த போது, விளம்பரத்தில் குழந்தை இரும அம்மா நெஞ்சில் விக்ஸ் தடவினாள், ஊய்! என்று சீழ்க்கை ஒலி காதைப் பிளந்தது, ஏய்! ஆப்பரேட்டர் படத்தை போடு என்று ரசிகர்கள்(?) திரும்பி ஒளித்துளைகளை பார்த்து கத்த, படம் இனிதே ஆரம்பித்தது...

நிறைய நெஞ்சு கோர்த்த சளியுடனும், ஏகப்பட்ட கீறல்களுடனும் ஒலி, ஒளி காட்சி நூற்றாண்டு பழைமையான பிலிமில் யாரையோ துப்பாக்கியுடன் துரத்தி ஓட, தியேட்டரே அமைதியாய் அந்த நேரத்திற்காய் காத்திருந்தது.. சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு கருப்பழகி முன் பக்க அழகை காட்டி ஹைவேயில் வண்டியை நிறுத்த...காரோட்டி ஓரமாய் நிறுத்தி சல்லாபித்தான், எங்கிருந்தோ மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஜெர்கின் அணிந்த பெண், காரோட்டியை சுட.. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் விழிப்புடன் கவனிக்க, திடீரென்று கருப்பு வெள்ளையில் மாறிய படத்தில் ஒரு அரைகுறை புணர்ச்சி சமபந்தமே இல்லாத பின்னணி இசை அபத்தமாக அவர்களின் விரக ஓசைகளை தின்று கொண்டு இருந்தது, யாரோ கூட்டத்தில், தொட்டி! சிமிண்ட்டு தொட்டி!! என்று கத்த, தியேட்டரே ஒரு வினோத ரசக்கலவையுடன் இருந்தது. ஒரு கற்பழிப்பு முயற்சி, ஒரு குளியல் காட்சியில் முதிர் கன்னி சோப்பை கரைக்க என்று நொடிக்கொரு காட்சி மாறி அரை மணியில் இன்டர்வெல் விடப்பட்டது... இன்டர்வெல்லின் போது தியேட்டர் மொத்தமும், வேறு ஏதோ அவசர ஜோலி இருப்பது போல் குண்டி மண்ண தட்டிட்டு கிளம்ப, தியேட்டரே காலியாகி விட்டது... சங்கர் எல்லோரையும் பார்த்து அவ்வளவு தான்.. இனிமே ஒன்னும் காட்ட மாட்டாய்ங்க என்று  சொல்ல...யாருக்கும் மனமில்லாமல் இருங்கடா!முழுசா பாத்துட்டு போயிரலாம்னு ராதா சொல்ல, எல்லோரும் முட்டை போண்டா, முறுக்குடன் காத்திருக்க, திரை ஒளி பெற்று உர்சுலா யாரையோ கட்டி வைத்து உதைக்க, கிழிந்த உடையில் அவளுடைய ஒரு பக்க மார் தெரிய அக்கறையில்லாமல் அவனை அடிப்பதிலேயெ குறியாய் இருக்க, ஒரு பாம் வெடித்து பத்து நிமிடத்தில் படமே முடிந்தது. கையில் இன்னும் முட்டை போண்டாவும், முறுக்கும் மிச்சம் இருக்க, யாரை நோவது என்று தெரியாமல் எழுந்தோம். இதுக்கு ராஜா தியேட்டரே பரவாயில்லை என்று சங்கரை எல்லோரும் உக்கிரமாய் முறைக்க, அவனும் அவன் தியேட்டர் ஓனர் போல குற்ற உணர்ச்சியுடன் நின்றான். பெருமூச்சில் ஒரு பெரிய அங்கலாய்ப்புடன் வெளியே வந்தோம்... சங்கர் தன்னால நடந்த தவறுக்கு வருந்தி அடுத்த வாரம் அவனுடைய அப்பா அம்மா ஊருக்கு போவதாகவும் அப்போ வீட்லேயே கேசட் போடலாம் என்றும் கூற... எல்லோரும் அதில் சந்தோஷித்து.. அந்த நாளுக்காய் காத்திருந்தோம்...

No comments:

Post a Comment