Thursday, November 19, 2009

அப்பா என்கிற அகழ்வு

பாரா எழுதிய ஒரு பதிவுக்கு பதிலி!

அன்பு பாரா,


எனக்கு இதை முழுதும் படிக்க முடியவில்லை, படிக்கவும் இல்லை. முதல் பத்தி எனக்காக எழுதியதாக இருக்கிறது. என் அப்பா மாட்டுப்பொங்கல், நாங்க (நானும் என் மனைவியும்) அவருடன் இல்லாத பொங்கல் நாளில் எங்களின் நினைவுகளில் இருந்ததாக ஹரி சொன்னான். அன்று காலை இடது கை ஒலையுதுடா ஹரி! நவ நீதன் டாக்டர்ட்ட போய்ட்டு வந்துடலாமா என்றவுடன், ஹரி சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புகிறான். என் அப்பா எப்பவுமே 5 மணிக்கே எழுந்து அம்மாவுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு பாத்திரமெல்லாம் விளக்கி வச்சுடுவார், துணிமணியெல்லாம் துவைச்சு தருவார், ஒரு தாயுமானவனாய் இருந்தார், இருந்த வரை. ஊரில் இருந்து வந்தவுடன் என் துணிகளையும், என் மனைவியின் நைட்டி முதற்கொண்டு எந்தவித பாகுபாடும் இல்லாமல் துவைத்துத் தருவார். 6 மணிக்கு எல்லா வேலையையும் முடித்துவிட்டு, குளிர குளிர பச்சைத் தண்ணில குளிச்சுட்டு (என்ன சிதோஷ்ன நிலையாய் இருந்தாலும் அவர் வென்னீரில் குளித்ததே இல்லை) திவ்யமா, ஆண்டாள் பாசுரங்கள் எல்லாம் சொல்லி, உடல் முழுக்க சந்தனமோ, திருநீரோ இட்டு, ஈசி சேரில் சாய்ந்த படி பேப்பர் படிப்பார். மிக இலகுவான விஷயங்களில் மட்டுமே அவருக்கு ஈர்ப்பு. அரசியல் தெரியாது, சினிமா தெரியாது, ஆனாலும் பேப்பர் படிப்பார், எதற்கென்று தெரியாது இன்றுவரை.



ஹரி கிளம்புவதற்கு முன்னாலேயே அப்பாவுக்கு லேசா மார் வலிக்குதுன்னு சொல்லி சரிந்தார். இரண்டாவது மாடியில் இருந்து அவரை முதல் மாடிக்கு வந்து சேர்வதற்குள், மிகப்பெரிய விக்கலுடன் ஹரியின் கையில் இறந்து போனார். ஏழு நிமிடங்களே அந்த வலியில் முகம் சுருக்கியிருப்பார், போதும்டா என்பது போல ஹரியை பார்த்து ஒரு முறுவலுடன் இறந்து போனதாய் சொன்னான். பெங்களூரில் நான் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது என் மனைவிக்கு வந்த தகவலில் அப்பா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் உடனே கிளம்பி வரவேண்டும் என்று ஹரியின் நண்பன் லட்சுமணன் கூறியிருக்கிறான். என் மனைவியின் மேல் பிரியத்தை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருணனாய் பொழிந்தவர். இவர்கள் இருவரும் கைபிடித்து பேசிக் கொண்டிருக்கும்போது அம்மாவுக்கு கொஞ்சம் பொறாமையாய்க் கூட இருக்கும். பேண்ட் போட்டு பழக்கம் இல்லாத அப்பாவை, என் மனைவி பேண்டு போட வைத்து பெங்களூர் முழுக்க சுற்றிக் காட்டினாள். நான் கல்யாணம் ஆன நாள்ல இருந்து சொல்லுறேன், பேண்ட் போட்டுக்கோங்க, தலைமுடிக்கு டை அடிச்சுக்கோங்க, அப்பவெல்லாம் கேக்கல, மருமக வந்து சொன்னவுடனே, இவருக்கு வயசு திரும்பது என்று அடிக்கடி சடைத்துக் கொள்வாள் அம்மா. அப்பா என் மனைவியைப் பார்த்து, என் அம்மா இருக்கும் பக்கமாய் காட்டி, சரியான கோட்டி அவ! என்று லேசா தன் தலையில் அடித்துக் கொள்வார் என் மனைவியின் சிரிப்புக்கிடையே.



நானும் என் மனைவியும் காதலர்களாய் இருந்த போது, கல்லூரியில் இருந்து கொடைக்கானல் போயிருந்தோம், அப்போது நான் சென்னையில் வேலைப்பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன் ஒரு மாலைக் கல்லூரியில். மதுரை வந்து தான் கொடைக்கானல் போனோம். என் வீட்டிலும் இதைப் பற்றி சொல்லியிருந்தேன், இவளைப்பற்றியும் சொல்லியிருந்தேன். என் மனைவி கிறித்துவ பெண் என்பதால் என் அம்மாவுக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை. அப்பாவிற்கு இவளைப்பார்க்க ஆசையா இருந்திருக்கு, ஹரியை உடன் அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு என் அம்மாவிடம் சொல்லாமல் எங்களை, இவளை பார்க்க வந்திருந்தார். மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ஒரு வினாயகர் கோவில் இருக்கும் அதற்கு அருகில் எங்களை இருக்கச் சொல்லியிருந்தார். கொஞ்சம் ஆட்டோக்களுக்கு மத்தியில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், நாங்கள் இருவரும் சிறிது தள்ளி ஒரு விளக்கு கம்பத்தின் கீழ் நின்றோம். ஹரி எங்கள் இருவரையும் பார்த்து அப்பாவை அழைத்துக் கொண்டு அருகில் வந்தான். வந்தவுடன் இவளை உற்றுப் பார்த்தார், கீழிருந்து மேலாக ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார், என்னம்மா நல்லாயிருக்கியா? கொஞ்சம் நேரமிருந்தா வீட்டுக்கும் வந்திருக்கலாம்னு, தன்னுடைய ஏமாற்றத்தைச் சொன்னார். தீபாவளிக்கு சாண்ட்ராவ கூட்டிட்டு வாடான்னு என்னை நோக்கிச் சொன்னார். நானும் சரியென்று மையமாக தலையசைத்து வைத்தேன். ஏனோ சிறிது கண்கலங்கினார், இவள் அவர் கையைப் போய் பிடித்துக் கொண்டாள். என்னைத் தனியே அழைத்து கொஞ்சம் குட்டையா இருக்காள்ல என்று என் ஆமோதிப்பை எதிர்பார்த்தார், பிறகு அவரே நல்ல பிள்ளையாத் தெரியுது, நானும் அம்மாகிட்ட பேசுறேன், தோத்திரம்மா, உங்க வீட்ல எல்லாரையும் நான் விசாரிச்சதா சொல்லும்மா. பத்திரமா போய்ட்டு வாங்க, சாப்டீங்களா, ஏதாவது சாப்பிடலாமா, நேரமிருக்கா என்று கேட்டார், நாங்க சாப்பிட்டதைச் சொன்னதும். பாலு ஆட்டோல தான் வந்தோம் என்று தொலைவாய் கை காட்டி அதோ அங்க நிக்கிறான். என்று விடைபெற்றார். என் மனைவியும் கண்கலங்கி இருந்தாள். எனக்கு நிறைவாய் இருந்தது அந்த சந்திப்பு. அப்பா எல்லா சாதாரண பொழுதுகளையும் உன்னதமாக்கி விடுவார்.



அன்புடன்
ராகவன்

3 comments:

S.A. நவாஸுதீன் said...

இதை உங்களின் பின்னூட்டத்தில் படிக்கும்போதே ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது ராகவன்.

hayyram said...

gud

regards
ram

www.hayyram.blogspot.com

kumky said...

கலங்கடித்துவிட்டீர்கள்..
அப்புறமா கொஞ்சம் யோசிக்கவேண்டியதிருக்கிறது...கடந்து போன காலங்களை குறித்தும்.

Post a Comment