Sunday, October 11, 2009

நுன்மாண் நுழைபுலம்... (இரண்டாம் பதிவு(ப்பு))

கார்லின்ஸ் அப்பல்லோ, பெயர் போலவே ஒரு வித்யாசமான நண்பன். அவனுடைய பெயர் பற்றிய நிறைய கேள்விகள் இருந்தாலும், பெயர்க்காரணம் பற்றி கூட ஒரு விரிவான கலந்துரையாடல் எங்களிடையே இருந்ததில்லை. அவனுடைய பெயர் எனக்கு நீல் ஆர்ம்ஸ்டராங், நெப்போலியன் போனபார்ட், மார்ட்டின் லூதர் கிங் போன்ற சரித்திர புருஷர்களையும், சாதனையாளர்களையும் ஞாபகப்படுத்தும். அவனிடம் இதைப்பற்றி சொல்லும்போது மிகச் சிறிதாய் சிரிப்பான். சீராய் கீழிறங்கும் மூக்கு, சற்றே துருத்திய பல் வரிசை, வெளியே வந்து எப்போதும் விழலாம் என்பது போன்ற பெரிய பளபளக்கும் கண்கள், ஒடிசலான உடம்பு, இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி பின்னுக்குத் தள்ளி நெஞ்சை முன் தள்ளி ஒரே தாள கதியில் ஹவாய் செருப்பில் நடக்கும் ஒரு எங்கும் சந்திக்கக் கூடிய மிகச் சாதாரணமான தோற்றத்தில் அசாதாரணமான நண்பன். மிக ஏழ்மையான வீடு அவனுடையது, விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்ல தேர்ந்த படிப்பாளி. எங்கள் பள்ளியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில், தூரம் வந்த பெண்ணைப்போல் ஒதுங்கிய ஒரு சிறிய கிராமத்தில், அவன் வீட்டைப் போல ஒரு இருபது முப்பது வீடுகள் மட்டுமே இருக்கும் ஊர் தான் ஆலம்பட்டி.


தெருவில் இருந்து பார்த்தாலே வீடு மொத்தமும் தெரிவது போல் ஒரு வீடு. ஒரு பெரிய வேப்பமரத்தின் நிழலில், ஒரு வேப்பங்கன்றாய் குளிர்ந்து நின்றிருக்கும் அவன் வீடு. எதிரில் ஒரு புளிய மரம், சம்பந்தகாரர்களின் செய்முறையாய் தன் பங்கிற்கு நீண்டு தண்ணீர் பந்தலாய் நிழல் விரித்திருந்தது. அவனுடைய பெயர் அவனின் வீடு பற்றி வேறு விதமான ஒரு நினைப்பைக் கொடுத்திருந்தது, அந்த நினைப்பை அப்படியே புரட்டிபோட்டது போல இருந்தது அவன் வீடும், அவனுடைய அப்பாவும் அம்மாவும். கார்லின்ஸ் என்று அவனை அழைக்க அந்த இடத்திற்கே அந்த பெயர் அந்நியமாகப்பட்டது போல் இருந்தது. அவனுடைய அப்பா, கார்லின்ஸ் இரண்டு பேரும் அந்த சிறு வீட்டினுள் இருந்து வந்தார்கள். கார்லின்ஸ் எங்களைக் கண்டதும் பெரிதாக சிரித்தான், அவன் சிரிக்கும் போது அவனுடைய உதட்டை வைத்து பற்களை மூட முயல்வது அழகாக இருக்கும். அவன் அப்பா அவனின் சில பென்சில் திருத்தங்களுடன் இருந்தார். அவனின் உடன் பிறந்தவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியாது எனக்கு. அவசியமாகப்பட்டதும் இல்லை. அவன் வீடு இருந்த அந்தத் தெருவில் (வ.உ.சி தெரு என்று ஞாபகம்) இடது பக்கத்தில் முதல் வீடு அவனுடையது… வழியெங்கும் விரவி இருக்கும் நெருஞ்சி முட்செடிகளும், தொட்டாச்சினுங்கிகளும், பெயர் தெரியாத வெள்ளை, மஞ்சள் பூக்கள் தரையில் படர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், யாருக்காகப்பூக்கிறோம் என்ற எந்தவித கேள்விகளும் இல்லாமல் இயல்பாய் அவனை அடையாளம் காட்டுவது போல் இருந்தது. அவனை சந்திக்க அவன் வீட்டிற்கு சென்றது, அது தான் முதல் முறை. அவன் வீட்டிற்குள் போகாமல் வெளியே நின்று ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, அவன் அம்மா உள்ளே அழைத்தபோதும், வெளியிலேயே நின்று எதிரில் புளியமரம் விரித்திருந்த குளிர் நிழலில் கதைகள் பேசி சுவாரசியக் குறைபாடுகள் ஏதுமின்றி சினிமா, கவிதை என்று தின்று செரிக்க முடியாமல் திரும்பினோம். ஒரு தேர்ந்த, முதிர்ந்த நட்பு எங்களுக்குள் ஒரு மெல்லிய சூல் மேகமாய் நின்று பொழிந்துவிட்டுச் சென்றது. பேசியவற்றில் விஷயங்கள் குறைவாக இருந்தாலும், உணர்வுகள் பகிர்ந்து கொண்டது, கைபிடித்துக் கொண்டது அவனுடைய வெம்மையைக் காட்டியது. நான் யாரிடமாவது அல்லது யார் மீதாவது ஒரு அதிகாலை சூரியன் போல் இதமாய் இருந்திருக்கிறேனா என்று யோசித்தால் இல்லை என்றே சொல்லத் தோன்றும்.

ஆறாம் வகுப்பில் இருந்து அவனும் நானும் ஒன்றாக படித்திருந்தாலும் எங்களிடையே ஒரு நெருக்கம் வந்தது.. பத்தாவது படிக்கும் போதுதான். நான் மதுரை டவுனில் இருந்து ஒரு ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகமலையில் அமைந்துள்ள ஜெயராஜ் நாடர் மேல் நிலை பள்ளியில் படித்துக் கழித்தேன் என்னுடைய பள்ளி வாழ்க்கை முழுதும்... எப்போதும் ஒரு சப்ஜெக்ட் இரண்டு சப்ஜெக்ட் பெயில் ஆகும் எனக்கு, நல்ல ரேங்க் வாங்கும் கார்லின்ஸ் மிக தூரமாய் போனதில் ஆச்சரியம் இல்லை.. எங்களுக்கு ஒரு மிக பெரிய பாலமாய் இருந்தது... எஸ் கே பிரபு தான் என்று நினைக்கிறேன்... ஏதேச்சையாக ஒரு வைரமுத்துவின் பாடலில் ஏற்பட்ட சந்தேகம்.. கார்லின்ஸ்ஐ என் பக்கம் திருப்பியது...இளமை வயலில் அமுத மழை விழ...யார் எழுதியது என்ற கேள்வி எனக்கு திசை திருப்பப்பட்டது... நான் அந்தப்பாடலின் முழு ஜாதகத்தையும் சொல்ல, கார்லின்ஸ் என்னுடன் நெருக்கமானான் அல்லது நான் அவனை நெருக்கமாய் உணர ஆரம்பித்தேன்.. எனக்கு தெரிஞ்ச சப்ஜெக்ட் பேச, என்னை பிரதானப்படுத்த கிடைத்த அந்த வாய்ப்பை நான் நழுவ விடவில்லை.... கொஞ்சம் கொஞ்சமாக...வைரமுத்து, பாலகுமாரன், மு.மேத்தா, அப்துல் ரஹ்மான், வாலி, கண்ணதாசன் என்று சினிமா பாடல்களில் கவிதை என்ற கடை விரித்து புது உலகம் அறிமுகம் செய்தேன் அவனுக்கு... என்னுடைய அம்மாவிடம் இருந்து வந்த சினிமா அறிவும், சிலோன் ரேடியோவும் எனக்கு புது அங்கீகாரங்களை தேடி கொடுக்கும் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. மிக நெருக்கமாய் உணர ஆரம்பித்த ஒரு வருட காலத்தில் அவனுடைய அந்த எளிமையான, இயல்பான ஒரு சிநேகம்.. எனக்கு மழை நேரம் கிடைத்த தாழ்வாரமாய் அமைந்தது.

கார்லின்ஸ் ஒரு மஹாகலைஞன், அவன் கைப்படும் பொருட்கள் எல்லாம் கலையாய் மாறும், அவன் புத்தகங்களில், நோட்டில், ப்ராக்டிகல் வரைபடங்களில் அவனுடைய முத்திரை, அவனுடைய பெயர் எழுதி இருக்கும் விதமே அவனை ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாய் காட்டும்... மிக சிறந்த பிரபலம் இல்லாத ஓவியன்...என் பள்ளியில் நடக்கும் ஓவியப்போட்டிகளில், கையெழுத்துப்போட்டிகளில் பரிசு பெற முழுத்தகுதி கொண்டிருந்தும் அதைப்பற்றி அவன் எப்போதும் கண்டுகொண்டதில்லை. நல்ல ஒரு கவிஞன்...அவனின் சந்தகவிதைகள் எல்லா அடிப்படை இலக்கன விதிகளுக்கும் உட்பட்டு ஒரு சீசாவுக்குள் உறங்கும் மாயப்பிசாசாய் உருமாறும் ரகசியம் இன்று வரை எனக்கு வாய்க்கவே இல்லை. நான் அவனை ஏன் பெரிதாக உற்சாகப்படுத்தவில்லை என்பது எனக்கு இன்று வரை புரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் பாரதியின் மேலான ஈர்ப்பு ஒரே வகையானது. அவருடைய பக்தி, காதல், அன்பு என்று மாறி மாறி பயணிக்கும் பாடல்கள் எங்களுக்கு மிகப்பிடித்தமானவை. அவருக்குள்ளே இருக்கும் ஒரு முரன் எங்களை பாரதியின் பால் மேலும் கொண்டு சென்றது. இருவருமே பாரதியின் பாதிப்பில் கவிதை எழுத ஆரம்பித்தோம். எத்தனையோ முயன்றும் அவனின் கற்பனைத்திறன் எனக்கு வாய்த்தே இல்லை. அதுவும் அவனுடைய கையெழுத்து அதை இன்னும் அழகாக்கும். கண்ணம்மா என் காதலி போல அவன் எழுதிய கண்மணி என் காதலி என்ற காதல் வழியும் பாடல்கள் படிக்கிற எல்லோரையும் காதலுறச்செய்யும். அவனுக்கு அந்த வயதில், பதினாறு வயதில் காதல் இருந்திருக்க வேண்டும், அதை அவனிடம் கேட்டு அவனை கேலி செய்யக்கூட தோன்றாது யாருக்கும். ஒரு புனல் நீராய் சுனை நீராய் சுத்தமாய், தித்திப்பாய் இருந்திருக்கிறான். யாரையும் நோகாமல் தன் கருத்துக்களை வைக்கும் ஒரு உன்னத ரசிகன், விமர்சகன், நிறைய பேர் ராஜமார்த்தாண்டன் இறந்தபோது அவருடைய விமர்சிக்கும் பண்பை மிக சிலாக்கியமாய் சொல்லியிருந்தார்கள், அதைப்படிக்கும் போது எனக்கு கார்லின்ஸ் என்ற நண்பனின் உன்னத குணங்களில் ஒரு வியப்பு தான் மிஞ்சியது. மிக சிறந்த மனிதன்... ரொம்பவும் நல்லவன்... ஒரு கிறித்துவன் நல்லவனாய் இருப்பது விசேஷம் இல்லை... ஏசுவாக இருப்பது மிக அரிது... அவன் ஏசுவாய் தெரிந்தான் எனக்கு… அல்லது அவன் ஏசுவின் தண்மையைக் கொண்டிருந்தான். எத்தனையோ விதமான மனக்குறளிகளை தன்னுடைய நல்லதனத்தினால் சொஸ்தபடுத்தி இருக்கிறான். என்னை விட எல்லா விதத்திலும் சிறந்த அவனை பார்த்து எனக்கு கிஞ்சித்தும் பொறாமை ஏற்பட்டதில்லை... அவனுடைய நல்லதனம் என் பொறாமை, பொச்சரிப்பு எல்லாவற்றையும் பொசுக்கி விட்டது போல.....

வகுப்பின் இடைவேளை சமயங்களில் எங்களுக்குள் ஒரு விளையாட்டு நடக்கும், பார்வையாளர்களாக அண்ணாதுரை, குரு இருப்பது வழக்கம், வகுப்பில் இருக்கும் கரும்பலகையில் நான் அல்லது அவன் எதாவது ஒரு சினிமா பாடலின் நடுவில் இருந்து ஒரு வரியை எழுதுவோம் அதை மற்றவர் கண்டு பிடிக்க வேண்டும்... என் கையெழுத்து திருந்தியதற்கு இந்த ஒரு விளையாட்டு ஒரு காரணம். ஒருமுறை எழுதியதில் அழிக்காமல் விட்டுச்சென்ற ஒரு வைரமுத்துவின் ஒரு பாடல் வரி….சேலைப்பூக்களில் தேனைத் திருடுது பொன்வண்டு… எங்களுக்கு ஆங்கிலம் எடுக்கும் ரெங்கசாமி என்ற வாத்தியார் பார்த்து எங்களை கடிந்தது அவனுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. நான் நிறைய படிக்க, எழுத உதவிய ஒரு கிரியாஉக்கியாக இருந்திருக்கிறான். என்னுடைய இன்றைக்கும் இருக்கும் எழுத்து ஆர்வம், வாசிப்பு மேம்பட்டதிற்கு ஒரு மிகப்பெரிய காரணகர்த்தா அவன்…. அநேதமாக எல்லா பிரபல பாடல்களும் எனக்கு பரிச்சயமாய் இருந்தாலும் அவனின் தேர்வுகள் நிறைய வித்யாசமாய் இருக்கும்... ஆட்டோ ராஜா என்ற படத்தில் இருந்து வரும் ஒரு பாடல்... மலரே என்னென்ன கோலம்... கடலில் அலைகள் பொங்கும்... ஒரு ராகம் பாடலோடு.... சித்திரை செவ்வானம்... ராஜாமகள், மஞ்சள் நிலாவுக்கு, ஜெய்சந்தரனின் தீவிர ரசிகனனான கார்லின்ஸ் என்னை அவன் பால் ஈர்த்ததற்கு ஒரு மிக முக்கிய காரணம் அவனுடைய மேலான ரசனை என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு முறை திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் (பரவை என்று ஞாபகம்) ஒரு இடிபட்ட அல்லது இடிக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் கரும்பலகை இருக்கும் சுவர் மாத்திரம் தனித்து நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து அழிக்காமல் விட்ட கையெழுத்தில் பாரதியின் கவிதை எனக்கு மீண்டும் கார்லின்ஸை ஞாபகப்படுத்தியது. இது போன்ற பள்ளியில் என்னைப்போல் கார்லின்ஸ் போல் சினிமா பாடல்களை கவிதை அந்தஸ்திற்கு உயர்த்திய குழந்தைகள் இருந்திருக்கலாம். அந்த குழந்தைகள் இப்போது வேறு ஏற்பாடாக வேறு ஒரு பள்ளிக்கோ அல்லது இந்த பள்ளியே வேறு ஒரு இடத்திற்கு பெயர்ந்திருக்கலாம். அங்கும் கார்லின்ஸ் போன்ற நண்பர்கள், என் போன்றவர்களுக்கு அமைந்திருக்கலாம், அவர்களும் கதை பேசி, கதை சொல்லி, உணர்வு பகிர்ந்து, உணர்வெழுதி வாழ்ந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம்.

அவன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி எஞ்சினியரிங் படிக்கச் சென்றதாக வந்த கடைசித் தகவல் போதுமானதாக இல்லை அவனை அடையாளம் காண… நல்ல கவிமனமும் கொண்ட அவன் இப்போது எப்படி இருப்பான், அவனுள் இருக்கும் அந்த மண்பாண்டக் கலைஞன் இன்னும் உயிரோடு இருப்பானா? அவனின் மரபடையாளங்கள் இன்னும் யாரிடமாவது மிச்சம் இருக்குமா…?. வாழ்க்கை தனது ஓட்டத்தில் இவனை இடறிச்சென்றிருக்குமா அல்லது புதிய சப்பாத்துகளை கொடுத்திருக்குமா? தொடர்பற்ற வெளியில் சமூக வலைகள் பின்னிக்கிடக்கிறது எங்கும், உறவு தேடி அலைகிறோம் காற்றில். ஒரு கட்டியக்காரணாய் அலைகிறேன் அவனைப்பற்றிய நினைவுகளுடன், சிலிக்கன் பெருவெளியில் தொலந்து போனவர்களின் பட்டியலில் அவன் பெயர் இல்லாதிருக்கட்டும்… இந்தமுறை மதுரை செல்லும்போது அவனைப்போய் பார்க்க வேண்டும் என்று பிரபுவிடம் சொல்லி வைத்திருந்தேன். எனக்காக அவனும் கடையை கடைப்பையனை பார்க்க சொல்லிவிட்டு என்னுடன் கிளம்பினான்.

ஒரு ஞாயிறு முன்பகலில் கார்லின்ஸை சந்திக்கும், அவன் இருந்த ஊரைப் பார்க்கும் அந்த விசேஷ தருனத்திற்காக ஆலம்பட்டி நோக்கி விரைந்தோம்….. நம்பிக்கையுடன்.

(என் பதிவுலகை இப்போது வாசிப்பவர்கள் நான் இதை ஆரம்பித்த போது எழுதியதை படித்திருக்க மாட்டார்கள் என்பதால், இதை மறுமுறை பதிகிறேன்.. ஏற்கனவே படித்தவர்கள் மன்னிக்கவும்)

No comments:

Post a Comment